
திருப்பதி கோயிலின் நிர்வாக அதிகாரியாக வட இந்தியரை நியமித்து இருக்கும் மத்தியஅரசு, வட இந்திய கோயில்களான காசி, மதுரா, அமர்நாத்தில் தென் இந்தியர்களை அதிகாரியாக நியமிக்குமா என தெலுங்கு திரைப்பட நடிகர் பவன் கல்யாண் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக வடஇந்தியரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அணில் குமார் சிங்கால் கடந்த 2 நாட்களுக்கு முன்நியமிக்கப்பட்டார்.
இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், “ நான் வட இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஒன்றும் எதிரி இல்லை. திருமலை திருப்பதி கோயிலில் நிர்வாக அதிகாரியாக பொறுப்பு ஏற்றவருக்கும் எதிரிஇல்லை. ஆனால், வட இந்தியாவில் உள்ள காசி, மதுரா, அமர்நாத் கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் தென் இந்தியர்களை மத்தியஅரசு நியமிக்குமா
வட இந்தியாவில் உள்ள கோயில்களில் தென் இந்தியர்களை ஏன் நியமிக்க மத்தியஅரசு மறுக்கிறது, ஏன் அங்கு தென் இந்தியர்களை நியமிக்க கூடாது.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு, எப்படி அனுமதிக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. அவர் நிச்சயம் தென் இந்திய மக்களுக்கும், ஆந்திரா மக்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், திருமலை திருப்பதி கோயிலின் நிர்வாக அதிகாரியான சிங்கால், டெல்லியில் உள்ள ஆந்திரா பவனில் 2ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்கிறார்கள்.
இது குறித்து கருத்து தெரிவிக்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் மறுத்துவிட்டனர்.
ஆனால், பவன் கல்யாண் பேச்சுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. திவாகர் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் கூறுகையில், “ எந்த விதக் காரணமும் இல்லாமல், பவன் கல்யாண் பிரித்தாளும் பேச்சை பேசுகிறார். ஏன் எப்போதும் தெற்கு-வடக்கு என பேசுகிறார். நம் மாநிலத்துக்கு நியமிக்கப்பட்ட அதிகாரியை நாம் எப்படி பார்க்க வேண்டும். இதற்கு முன்பு இருந்த தென் இந்தியப் போன்று, இப்போது நியமிக்கப்பட்ட அதிகாரியும் தகுதியானவரே. பவன் கல்யாண் கூறுவது தவறு” எனத் தெரிவித்தார்