
ஆயுஷ் அமைச்சகம், ரெயில்வே, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் டாக்டர்களின் ஓய்வு பெறும் வயது 62 லிருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் சில துறைகளில் டாக்டர்களின் ஓய்வு வயது 60 ஆகவும், சில துறைகளில் 62 ஆகவும் இருந்து வருகிறது, இந்த உத்தரவு மூலம் இனி அனைத்து துறைகளிலும் பணியாற்றும் டாக்டர்களின் வயது சீராக 65 ஆக உயர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
65 வயது
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லியில் நிருபர்களுடன் கூறியதாவது-
மத்திய அரசின் கீழ் பணியாற்றும் டாக்டர்களின் ஓய்வு பெறும் வயது 62ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களின் நலனுக்காகவும், நோயாளிகளின் நலனுக்காகவும் எடுக்கப்பட்டது.
இதன் மூலம் அனுபவம்மிக்க டாக்டர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம், நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சையை அளிக்க முடியும். மேலும், டாக்டர்-நோயாளிகளின் விகிதத்தை அதிகப்படுத்த இது உதவும்.
1445 டாக்டர்கள்
நாட்டில் ஏராளமான காலியிடங்கள் மருத்துவத்துறையில் இருக்கும் போது, இந்த முடிவு அதிகமான நிதி பாதிப்புகளை ஏற்படுத்தாது. தற்போது பணியாற்றும் டாக்டர்களே தொடர்ந்து பொறுப்புடன் பணியில் ஈடுபட முடியும். இதன் மூலம் நாடுமுழுவதும் மத்திய அரசின் கீழ் பணியாற்றும் 1,445 டாக்டர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யார் பயன்பெறுவார்கள்?
ஓய்வு பெறும் வயதில் இருக்கும் ஆயுஷ் அமைச்சகத்தில் பணியாற்றும் டாக்டர்கள், பாதுகாப்பு துறை, ஆயுதங்கள் உற்பத்தி துறை, சுகாதாரத்துறை, ரெயில்வேதுறைகளில் பணியாற்றும் பல் மருத்துவர்கள், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறவனங்களில் பணியாற்றும் டாக்டர்கள் பயன்பெறுவார்கள்.
மேலும், மத்திய அரசு பல்கலைக்கழங்கள், ஐ.ஐ.டி., கப்பல்துறை ஆகியவற்றில் பணியாற்றும் டாக்டர்களும் பயன் அடைவார்கள். நிர்வாகத்துறையில் பணியாற்றும் டாக்டர்கள் 62 வயது வரை நிர்வாகத்திலும், அதன்பின் நிர்வாகம் அல்லாத பிரிவிலும் பணியாற்றுவார்கள்.
ஜூலை மாதம்
துணை ராணுவப்படை, எல்லைப் பாதுகாப்பு படை, அசாம் ரைபிள் படை ஆகியவற்றில் பணியாற்றும் டாக்டர்களின் ஓய்வு வயது 60லிருந்து 65 ஆக கடந்த ஜூலை மாதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.