
மத்திய அரசு செல்லாது என அறிவித்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எண்ணும் பணியில் உள்ள ஊழியர்கள், விடுமுறை எடுக்காமல் வேலை பார்த்து வருகிறார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவில் ரிசர்வ் வங்கி கவர்னர்உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். ஒட்டுமொத்த பணத்தின் புழக்கம் அப்போது ரூ.17.7 லட்சம் கோடியாக இருந்தது.
மக்கள் தங்களிடம் இருக்கம் செல்லாத நோட்டுகளை வங்கி, தபால்நிலையத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ள நவம்பர் 9 முதல் டிசம்பர் 30ந்தேதி வரை 50 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் மக்கள் பெரிய அளவிலான துன்பங்களைச் சந்தித்தனர்.
ரூபாய் நோட்டு தடை முடிவு திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு, எப்படி ரிசர்வ்வங்கி தயாரானது என்பது குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலை அழைத்து காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தலைமையிலான நிலைக்குழு விசாரணை நடத்தியது.
இந்நிலையில், 2-வது முறையாக நேற்றுமுன்தினம் நிலைக்குழு முன் ரிசர்வ்வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஆஜராகினார். அப்போது, ஏறக்குறைய 3 மணிநேரம் உர்ஜித்படேலிடம் நிதிக்கான நிலைக்குழு அவரிடம் கேள்விகள் கேட்டது. ஆனால், இதுவரை செல்லாத ரூபாய் நோட்டுகள் எவ்வளவு வங்கிக்கு வந்துள்ளது குறித்து உர்ஜித் படேல் தெரிவிக்கவில்லை. இது குறித்த உறுதியான தொகையையும் உர்ஜித் கூறாததால், பெரும்பாலான எம்.பி.க்கள்அதிருப்தி அடைந்தனர்.
மேலும் அப்போது, உர்ஜித் படேல், “ செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்களும் இடைவிடாத எந்திரங்கள் மூலம் எண்ணி வருகிறார்கள். மிகப்பெரிய இலக்கு இருப்பதால், ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
நாடாளுமன்ற நிதிக்கான நிலைக்குழுவின் தலைவர் வீரப்பமொய்லிகூறுகையில், “ ரூபாய் நோட்டு தடை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நீண்ட விவாத்தை உர்ஜித்படேலுடன் நடத்தினோம். ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக மீண்டும் உர்ஜித் அழைக்கப்பட மாட்டார். வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிலைக்குழு நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்கும்’’ எனத் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் 3 மணிநேரம் நிலைக்குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு புறப்பட்டார். எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறிப்போய் உர்ஜித் படேல் வௌியே வந்தார். அப்போது அம்பாலா தொகுதி மக்களவை எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா, ஓடிவந்து, உர்ஜித் படேலுடன் ஒரு செல்பி எடுத்துக்கொண்டார்.