
பத்து ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை என்று ரிசர்வ் வங்கி கூறி வந்தாலும், பத்து ரூபாயை வாங்க வங்கி காசாளருக்கும், வாடிக்கையாளருக்கும் ஏற்படும் வாக்குவாத காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் இதனை வாங்க மறுப்பதும், தங்களிடம் இருக்கும் பத்து ரூபாய் நாணயத்தை மாற்ற முடியாமல் சிரமப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும், அப்படி வாங்காதபட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
வியாபாரிகள், பேருந்து நடத்துனர்கள் என பல்வேறு தரப்பினர் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கு மத்தியில், அரசு வங்கி ஒன்றிலேயே பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் சம்பவம் ஒன்று புதுச்சேரி பகுதியில் நடந்துள்ளது.
புதுச்சேரி, வில்லியனூர் கிழக்கு கார் வீதியில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கார்த்திகேயன் என்ற வியாபாரி, தன்னிடம் இருந்த 50, பத்து ரூபாய் நாணயங்களை வங்கியில் மாற்ற சென்றுள்ளார். ஆனால், அதனை வங்கியின் கேஷியர் வாங்க மறுத்துள்ளார். ஏன் வாங்க மறுக்கிறீர்கள் என்று கார்த்திகேயன் கேட்டதற்கு, வாங்கக் கூடாது என வங்கி ஊழியர் ஒருவர் கூறுகிறார். அவர்களிடையே நடந்த இந்த வாக்குவாத காட்சிகள், வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.