செல்பிக்கு தடை விதித்த உ.பி. அரசு! "நியூ இயர் பரிசு" என அகிலேஷ் யாதவ் கிண்டல்!

First Published Dec 22, 2017, 11:45 AM IST
Highlights
selfie banned! Akhilesh Yadav teasing as New Year gift!


உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வசிக்கும் பகுதிகளில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த தடை ஆதித்யநாத்தின், நியூ இயர் பரிசு என்று முன்னாள் முதலமைச்சர்கள் கிண்டல் தொனியில் கூறி வருகின்றனர்.

செல்பி மோகம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. செல்பி எடுக்கும்போது விபத்து ஏற்பட்டு உயிரை பறி கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போதோ, ஓடும் பேருந்து, ரயில் முன்பு, கடலில், மலை முகடுகள் என பல்வேறு ஆபத்தான இடங்களிலும் நின்று இளைஞர்கள் செல்பி எடுத்து வருகின்றனர். இதனால், பலர் தங்களது இன்னுயிரையும் இழந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாது முக்கிய பிரமுகர்கள் வரும்போது, பொதுமக்கள் செல்பி எடுத்து வருவதால், பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச அரசு, விஐபி-க்கள் வசிக்கும் பகுதிகளில் செல்பி எடுக்க தடை விதித்துள்ளது. அதாவது அந்த மாநிலத்தின் முக்கியி பிரமுகர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்கள் செல்பி எடுக்கக் கூடாது என்று தடை போடப்பட்டுள்ளது. 

உபி முதலமைச்சர் ஆதித்யநாத் வீட்டுக்கு செல்லும் சாலையின் சந்திப்பில், இது குறித்து எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கிருந்து இந்த பலகை அகற்றப்பட்டது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் நியூ இயர் பரிசு என்றும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

click me!