
மத்தியப் பிரதேச மாநிலம், வனவிலங்கு பாதுகாப்பில் ஒரு புரட்சிகரமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. போபால் - ஜபல்பூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் (NH-45), வனவிலங்குகள் சாலையைக் கடக்கும்போது ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தியாவின் முதல் ‘சிவப்பு சாலை’ (Red Road) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகத்தின் வழியாகச் செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப் பகுதியில் இந்தத் தனித்துவமான வடிவமைப்பை மேற்கொண்டுள்ளது.
5 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட சிவப்பு நிற 'தெர்மோபிளாஸ்டிக்' (Thermoplastic) பூச்சு சாலையின் மேல் பூசப்பட்டுள்ளது.
இது வழக்கமான வேகத்தடைகளைப் போலல்லாமல், வாகனங்களுக்கு எந்தவிதமான அதிர்வையும் ஏற்படுத்தாது. ஆனால், சிவப்பு நிறத்தைப் பார்த்தவுடன் வாகன ஓட்டிகள் இது வனவிலங்கு மண்டலம் என்பதை உணர்ந்து, இயல்பாகவே வேகத்தைக் குறைப்பார்கள்.
வெறும் சிவப்பு நிறச் சாலை மட்டுமின்றி, விலங்குகளின் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு மேலும் சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
1. 25 வனவிலங்கு சுரங்கப்பாதைகள்: விலங்குகள் சாலையின் குறுக்கே வராமல், அதன் அடியில் பாதுகாப்பாகச் செல்ல 25 இடங்களில் பிரத்யேகச் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2. இரும்பு வேலிகள்: நெடுஞ்சாலையின் இருபுறமும் 8 அடி உயர இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை விலங்குகளைச் சுரங்கப்பாதை நோக்கி வழிநடத்தும்.
3. வேகக் கட்டுப்பாட்டு கருவிகள்: வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்கவும், ஓட்டுநர்களை எச்சரிக்கவும் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மோதி சிறுத்தைப் புலிகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக, இப்பகுதி நௌரதேஹி சரணாலயம் மற்றும் துர்காவதி புலிகள் காப்பகத்தின் இதயமாகக் கருதப்படுகிறது.
சுமார் 122 கோடி ரூபாய் செலவில் இந்த 11.9 கி.மீ நீள நெடுஞ்சாலைப் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துபாயின் புகழ்பெற்ற ஷேக் சயீத் சாலை (Sheikh Zayed Road) வடிவமைப்பின் அடிப்படையில் இந்தச் சிவப்பு சாலை முறை ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி வெற்றிபெறும்பட்சத்தில், இந்தியாவில் வனப்பகுதிகள் வழியாகச் செல்லும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இத்தகைய 'சிவப்பு சாலைகள்' அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.