ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்காலம்… 3 ஆண்டுகள் நீட்டித்தது மத்திய அரசு

By manimegalai aFirst Published Oct 29, 2021, 10:09 AM IST
Highlights

ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநராக 2018ம் ஆண்டு முதல் இருப்பவர் சக்தி காந்த தாஸ். மத்திய அரசினுடைய பொருளாதார விவகாரத்துறையின் முன்னாள் செயலாளராக இருந்தவர்.

ஒடிசாவை சேர்ந்த அவர் 1980ம் ஆண்டு ஐஏஎஸ் ஆனவர். தமிழக கேடரில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அதன் பின்னர் மத்திய அரசின் பணிகளுக்காக கடந்த 2008ம் ஆண்டு சென்றார். இதற்கு முன்பாக அவர் தமிழக அரசின் வருவாய்துறை ஆணையராக சிறப்பாக பணியாற்றினார்.

இது தவிர தொழில்துறை செயலாளர், திண்டுக்கல் கலெக்டர் என பல பணிகளில் இருந்தார். மிக சிறப்பாக, திறம்பட பணியாற்றும் அதிகாரி என்று பெயர் எடுத்த அவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அவரது பதவிக்கு வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந் நிலையில் இந்த பதவிக் காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சக்தி காந்த தாசின் பதவி காலத்தை 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பதவி நீட்டிப்புக்கான அறிவிப்பை மத்திய அரசின் கேபினட் குழு அறிவித்து உள்ளது. இதையடுத்து 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரிசர்வ் வங்கி ஆளுநராக தொடர்ந்து செயல்படுவார்.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுராம்ராஜன் ஓய்வு பெறும் தருணத்தில் ஆர்பிஐ ஆளுநராக பரிசீலிக்கப்பட்ட சமயத்தில் உர்ஜித் படேலுடன் சக்தி காந்த தாஸ் பெயரும் இருந்தது. ஆனால் உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2017ம் ஆண்டு மே மாதத்தில் சக்தி காந்த தாஸ் ஓய்வு பெற்றார். அப்போது உர்ஜித் படேல் ஆளுநர் பதவியில் இருந்து விலக, உடனடியாக சக்தி காந்த் தாஸ் நியமிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய டிமானிடைஷேசன் எனப்படும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருந்த முக்கிய அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!