துணை ராணுவப் படை மீது மணிப்பூர் காவல்துறை வழக்குப்பதிவு: ரவிக்குமார் எம்.பி., கவன ஈர்ப்பு நோட்டீஸ்!

By Manikanda Prabu  |  First Published Aug 9, 2023, 11:17 AM IST

துணை ராணுவப் படையான அசாம் ஃரைபிள்ஸ் மீது மணிப்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி., நாடாளுமன்ற மக்களவையில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இனக் கலவரம் வெடித்துள்ளது. மணிப்பூர் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக துணை ராணுவப் படையான அசாம் ஃரைபிள்ஸ் படையினர் அம்மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அசாம் ரைபிள்ஸ் படையினர் குக்கி இனத்தவருக்கு ஆதரவாக செயல்படுவதாக, மெய்தி இனத்தின் மணிப்பூர் பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல், மெய்தி இனத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக மணிப்பூர் மாநில போலீஸார் மீதும் பரவலான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

அண்மையில், நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் கூட மணிப்பூர் மாநில போலீஸார் தங்களை மெய்தி குழுவிடம் ஒப்படைத்ததாக அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், அசாம் ஃரைபிள்ஸ் துணை ராணுவப்படையின் 9ஆவது பட்டாலியனை சேர்ந்த வீரர்களுக்கு எதிராக, மணிப்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிஷ்னுபூர் பகுதியில் மெய்தி இனத்தை சேர்ந்த கொலை செய்யப்பட்டது தொடர்பாக சந்தேகத்துக்குள்ளான குக்கி இனத்தவரை தேடி அருகிலுள்ள சுராசந்த்பூரில் போலீஸார் குவிந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அசாம் ஃரைபிள்ஸ் படையினர், மாநில காவல்துறையினரை கடமையாற்ற அனுமதிக்காததோடு, திரும்பி போகச் செய்ததாக கூறப்பட்டது. அதனடைப்படையில், இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நம்பிக்கை இல்லா தீர்மானம்: 2ஆவது நாளாக இன்றும் விவாதம்!

ஆனால், மத்தியப் பாதுகாப்பு படையின் பொறுப்பில் உள்ள பகுதி என்பதால், சுராசந்த்பூரில் பதற்றம் எழுவதை தடுக்கவே காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டதாக அசாம் ஃரைபிள்ஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு எல்லையை குறிப்பாக, மியான்மருடனான எல்லைப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும், நாட்டின் மிகவும் பழமையான ராணுவப்படையான அசாம் ஃரைபிள்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், துணை ராணுவப் படையான அசாம் ஃரைபிள்ஸ் மீது மணிப்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் நாடாளுமன்ற மக்களவையில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

அந்த நோட்டீஸில், “மணிப்பூரில் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாக அஸ்ஸாம் ஃரைபிள்ஸ் துணை ராணுவப் படைமீது மணிப்பூர் பாஜக அரசின் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ராணுவத் தரப்பில் மணிப்பூர் காவல்துறையின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மணிப்பூர் போலீஸ் ஒரு சார்பாக இருப்பதும், நிர்வாணமாக ஊர்வலம் விடப்பட்ட பெண்களை அவர்கள்தான் ஆயுதம் தாங்கிய மெய்த்தி கும்பலிடம் ஒப்படைத்தனர் என்பதும்   அந்தப் பெண்களின் வாக்குமூலத்தால் அம்பலமாகியுள்ளது. உச்சநீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்கும் வழக்கில் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை மேற்பார்வை செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ‘அஸ்ஸாம் ஃரைபிள்தான்’ அங்கு கலவரம் பரவாமல் கொஞ்சமாவது தடுத்து வருகிறது. இந்நிலையில் துணை ராணுவப் படையையே அவமதிக்க மணிப்பூர் பாஜக அரசு முனைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.” என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பற்றி அவையில் விவாதிக்க வேண்டும் எனவும் கவன ஈர்ப்பு நோட்டீஸில் ரவிக்குமார் எம்.பி., குறிப்பிட்டுள்ளார்.

click me!