
ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள், ஊழல்கள் குறித்து புகார் தெரிவிக்க முகநூலில் பதிவு செய்யலாம் என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக உணவு பொருட்களை, தமிழக அரசு, ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவைக்காக ஆண்டுக்கு 5000 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்கிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் பலர் தங்களின் கார்டுகளை வெளியாட்களுக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் ஊழியர்கள் கள்ளச்சந்தையில் உணவு பொருட்களை விற்பனை செய்து விடுகிறார்கள்.
சில இடங்களில் உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதாகவும், வெளிமார்க்கெட்டில் உள்ள மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் வைத்து விற்பனை செய்வதாகவும் புகார்கள் வருகின்றன. இதுபோல், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் பல முறைகேடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
இவற்றை தடுக்க அதிகாரிகள் புகார் எண்கள் அறிவித்தனர். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் புகார் எண்களை பயன்படுத்துவதில்லை.
இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழல்களை, தங்களின் கையில் உள்ள செல்போன் மூலம் படம் அல்லது வீடியோ எடுத்து, முகநூல் பக்கத்திலோ அல்லது டுவிட்டர் பக்கத்திலே தங்களது புகாரை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகள் குறித்த புகார்களை, டி.என்.இ.பி.டி.எஸ். என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், இதுதுபோன்று வீடியோ, படத்தை பதிவு செய்து சமூக வலைதளத்தில் போடும்போது அந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை பார்த்து, மற்ற ஊழியர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபடாமல் இருப்பார்கள். இந்த புதிய முறையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.