
டெல்லி: பிரதமர் மோடி ஒரு ஊழலற்ற தலைவர், அவர் ஒரு 24 கேரட் தங்கம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
டெல்லியில் 'Delivering Democracy: Reviewing 2 Decades of Narendra Modi as Head of Govt' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.
கருத்தரங்கில் அவர் கூறியதாவது: இந்த நாட்டின் ஒரு உண்மையான தலைவர் பிரதமர் மோடி. அவர் ஒரு 24 கேரட் தங்கம். அவர் மீது ஒரு ஊழல் கறை கூட இதுவரை கிடையாது.
அப்படிப்பட்ட நல்ல மனிதர் பிரதமர் மோடி. நாட்டு மக்களுக்காக தம்மை அர்ப்பணிப்பதிலும், அதற்காக செயல்படுவதிலும் அவருக்கு நிகர் அவர் தான். நீண்ட அரசியல் அனுபவம் உடையவர்.
பிரதமர் மோடியின் 20 ஆண்டு கால அரசியலில் அவர் எத்தனையோ சவால்களை, பிரச்னைகளை பார்த்து வந்தவர். அனைத்தையும் மிக திறமையாக சமாளித்தவர். அவரது பற்றிய விவரங்கள் நிர்வாகவியல் கழகங்களில் பாடமாக வைக்க வேண்டும்.
நாட்டின் மிக சிறந்த ஒரு நல்ல ஆளுமை என்றால் அது அவர் தான். அதே போன்று ஒரு நல்லாட்சியின் உதாரணமும் யார் என்றால் அதுவும் பிரதமர் மோடிதான். அவர் முதலமைச்சராக இருந்த போது குஜராத் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றவர்.
இந்த சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்டவர். சப்கா சாத் சப்க விகாஸ் என்றும் பின்னர் சப்கா விஸ்வாஸ் சப்கா பிரயாஸ் என்றும் நடந்து கொண்டவர். மதசார்பின்மையின் புதிய அத்தியாயத்தை குஜராத்தில் தொடங்கியவர் பிரதமர் மோடி தான்.
நாட்டில் உள்ள தொழில்துறையினர், தொழில் அதிபர்களை மிகவும் மதித்தார். குறிப்பாக கட்டுமான துறையினரை வெகுவாக மதித்தார். அவர்களை ஆதரித்ததோடு மட்டும் அல்லாது தொழில்துறையிலும் அவர்களை ஊக்குவித்தார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட மக்களுக்கான அரசியலை அவர் முன்னெடுக்க மறுத்தது இல்லை. அவரின் முடிவெடுக்கும் திறமை, ஆட்சியில் நிர்வாக திறமை உள்ளிட்ட பல விஷயங்கள் என்னை கவர்ந்தன.
இந்திய தேசத்தை மகாத்மா காந்திக்கு பின்னர் அதிகம் நேசத்துடன் பார்ப்பவர். நாட்டில் பல ஆட்சிகள் வந்து போயிருக்கலாம். ஆனால் முதல் முதலாக நாட்டின் சிஸ்டத்தையே மாற்றியவர் பிரதமர் மோடி. சுதேசி என்ற முழக்கத்தை அவர் கையில் எடுத்துள்ளார் என்று பாராட்டி தள்ளி உள்ளார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.