பேரறிவாளன், முருகன் உட்பட 7 பேர் எந்த நேரத்திலும் ரிலீஸ்? சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

By vinoth kumarFirst Published Sep 6, 2018, 12:09 PM IST
Highlights

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது என உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்திருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது என உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்திருக்கிறது. இதையடுத்து 7 தமிழர்களும் எந்த நேரத்திலும் தமிழக அரசால் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதலில் தூக்கு தண்டனை கைதிகளாகவும் பின்னர் ஆயுள் தண்டனை கைதிகளாகவும் பேரறிவாளன், முருகன் உட்பட 7 பேர் சிறைவாசம் அனுபவித்து வந்தனர். ஆயுள் தண்டனை கைதிகளை மாநில அரசு விடுதலை செய்யலாம் என்பதால் 7 பேரும் விடுவிக்கப்படுவர் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இருமுறை 7 பேரின் விடுதலையை ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றத்துக்கு போனது மத்திய அரசு. இது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தமிழக அரசு தரப்பில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 161-இன் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய அதிகாரம் இருக்கிறது என வாதிடப்பட்டது. அதேநேரத்தில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை நிராகரிப்பதாக ஜனாதிபதி மூலமாக மத்திய அரசு மீண்டும் அறிவித்தது. 

இதனால் இவ்வழக்கில் எந்த முடிவும் எட்டப்படாத இழுபறி நீடித்து வந்தது. இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய், நவீன் சின்ஹா, ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, பேரறிவாளன், முருகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என கூறியதுடன் வழக்கை முடித்து வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பைத் தொடர்ந்து 27 ஆண்டுகளாக நீடித்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. தமிழக அரசைப் பொறுத்தவரையில் 7 பேரையும் விடுதலை செய்வது என்பதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறது. ஆகையால் 7 பேரையும் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு எந்த நேரத்திலும் விடுதலை செய்யும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

click me!