பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: 30 வருஷமா காங்., செய்த பிரிவினைவாத அரசியலை தோலுரித்த ராஜீவ் சந்திரசேகர்

By karthikeyan VFirst Published Sep 30, 2020, 10:19 PM IST
Highlights

பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து பாஜக தலைவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த வழக்கையும் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தையும் வைத்து காங்கிரஸ் கட்சி கடந்த சுமார் 30 ஆண்டுகளாக செய்துவந்த பிரிவினைவாத அரசியலை தோலுரித்து காட்டியுள்ளார் ராஜ்ய சபா பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர். 
 

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்க தூண்டியதாக, பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாராதி உட்பட 32 பேர் மீது குற்றச்சதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்று கூறி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்தும், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை வைத்து கடந்த 28 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்து வந்த மதவெறி அரசியலையும் கடுமையாக விமர்சித்துள்ளார் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து ராஜீவ் சந்திரசேகர் எழுதிய கட்டுரையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் கட்சி, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசுக்கு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சிபிஐ குற்றச்சதி வழக்கை பதிவு செய்ய அழுத்தம் கொடுத்தது. ஒரு கலக்கார கும்பல் திடீரென பாபர் மசூதியை தகர்த்தது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அத்வானி ஜி உள்ளிட்ட பெரும்பாலான பாஜக தலைவர்கள், பாபர் மசூதியை இடிக்க முயன்ற கும்பலை தடுக்க தீவிர முயற்சி எடுத்தனர்; ஆனாலும் முடியவில்லை. 

பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் அரசும் சிபிஐயும் இணைந்து குற்றச்சதி வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவர்கள் பதிவு செய்த வழக்குதான் பெரிய சதியே. அந்த ஒரு சம்பவத்தை வைத்து சுமார் 30 ஆண்டுகளுக்கு வாக்குவங்கி அரசியல் செய்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை வைத்து அரசியல் செய்து, எத்தனையோ தேர்தல்களை சந்தித்து எவ்வளவோ வாக்குகளை பெற்று வென்றிருக்கிறது காங்கிரஸ். முஸ்லீம்களின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்திராத போதிலும், காங்கிரஸ் கட்சியின் பொய்களை நம்பி முஸ்லீம் மக்கள் கண்மூடித்தனமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட துயர சம்பவத்தை வைத்து, அவநம்பிக்கை, பிரிவினை ஆகிய அச்சுறுத்தல்களை காட்டியே, வாக்கு அரசியல் செய்வது மட்டுமே, இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நோக்கம் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

இந்த வழக்கில், நீதிமன்றத்தால் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள தகுதியற்ற, செய்தித்தாள்கள் ஆதாரங்களை சமர்ப்பித்தது சிபிஐ. அதைக்கண்ட நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிவிட்டது. இந்திய நீதித்துறையை பொறுத்தமட்டில், தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்காத வரை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல. தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் சதி குற்றச்சாட்டை சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை. மத்திய பாஜக அரசு, சிபிஐக்கு அழுத்தம் கொடுத்து இந்த வழக்கை நீர்த்துப்போக செய்ததாக சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். சிபிஐ குற்றச்சதி வழக்கை பதிவு செய்தது, ஆதாரங்களை சமர்ப்பித்தது ஆகிய அனைத்துமே, 2014ல் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். 

அத்வானி ஜி, முரளி மனோகர் ஜோஷி, கல்யான் சிங் போன்ற உயர்ந்த தலைவர்களை குற்றச்சதி வழக்கில் இழுத்துவிட்டு, அவர்கள் இத்தனை ஆண்டுகளாக அந்த வழக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குதான், தலைவர்கள் மற்றும் சட்ட விவகாரங்களை, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான அணுகுமுறையில் வித்தியாசத்தை பறைசாற்றுகிறது. பாஜக சட்ட செயல்பாடுகளில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. 1999 முதல் 2004 வரை அடல் ஜி தலைமையிலான பாஜக ஆட்சி இருந்தபோது கூட, இந்த வழக்கு தொடர்பாக சிபிஐக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், போஃபர்ஸ் குவாட்ரோச்சி வழக்கு முதல் போபால் கேஸ் துயர சம்பவம் வரை, 2ஜி ஊழல் வழக்கு மற்றும் ஏனைய பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து தப்பிக்க வைத்துள்ளது காங்கிரஸ்.

பாபர் மசூதி இடிப்பு துயர சம்பவத்தில் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் ஒருபோதும் நினைத்ததே கிடையாது. அவர்களின் நோக்கம் எல்லாம், பாஜக தலைவர்கள் மீது ஆதாரமே இல்லாத பொய் வழக்கை பதிவு செய்து, அதன்மூலம் பிரிவினையை உண்டாக்கி, முஸ்லீம் மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே அரசியல் நோக்கம் மட்டுமே.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்த குற்றச்சதி வழக்கு பதியப்பட்டது. காங்கிரஸ் குடும்ப ஆட்சி, இந்த வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக போலியான அரசியல் சதி மட்டுமே செய்தது. அதன்விளைவாக, கடந்த பல்லாண்டுகளாக வன்முறை சம்பவங்களும் பயங்கரவாத தாக்குதல்களும் நடந்துள்ளன. காங்கிரஸ் மற்றும் வேறு பல அரசியல் கட்சிகளும் இதுவரை செய்துவந்த பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒற்றுமையான, ஒருங்கிணைந்த வலுவான இந்தியாவை கட்டமைக்க இதுவே சரியான தருணம் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
 

click me!