மனிதநேய பணிகளை மட்டும் செய்யுங்க.. அம்னெஸ்டி அமைப்பின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி எச்சரித்த உள்துறை அமைச்சகம்

By karthikeyan VFirst Published Sep 30, 2020, 12:45 PM IST
Highlights

இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிவித்த நிலையில், இந்தியாவில் அம்னெஸ்டி அமைப்பு மனிதநேய பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும், ஆனால் அதேவேளையில், மோசமான நடைமுறைகள் மூலம் தங்களது செயல்பாடுகளுக்கான நிதியை பெற முயலும் அம்னெஸ்டியின் முயற்சியை ஒருபோதும் இந்திய அரசு அனுமதிக்காது என்றும் இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிவித்த நிலையில், இந்தியாவில் அம்னெஸ்டி அமைப்பு மனிதநேய பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும், ஆனால் அதேவேளையில், மோசமான நடைமுறைகள் மூலம் தங்களது செயல்பாடுகளுக்கான நிதியை பெற முயலும் அம்னெஸ்டியின் முயற்சியை ஒருபோதும் இந்திய அரசு அனுமதிக்காது என்றும் இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்தும் சர்வதேச அரசு சாரா அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்திய அரசின் செயல்களால் தங்கள் பணிகளை இந்தியாவில் நிறுத்திக்கொள்வதாக தெரிவித்தது. இந்த மாத தொடக்கத்தில் அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், இந்திய அரசின் செயல்களை பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி, இந்த முடிவை அந்த அமைப்பு எடுப்பதாக அம்னெஸ்டி அமைப்பு தெரிவித்தது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு முறைகேடாக வெளிநாடுகளில் இருந்து நன்கொடை என்ற பெயரில் நிதி பெறுவதாகவும், அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து நிதியை பெறுவதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லை என்றும் மத்திய அரசு குற்றம்சாட்டியது.

இதையடுத்து இதுதொடர்பாக அம்னெஸ்டி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்திய அரசு தங்களைப் பழி வாங்குவதாக குற்றம்சாட்டியிருந்தது. தங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்பட்ட விவரம் செப்டம்பர் 10ம் தேதி தான் தெரியும்; அதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அம்னெஸ்டி அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது. இந்திய அரசின் செயலை சூனிய வேட்டை என்று கூறிய அம்னெஸ்டி அமைப்பு, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்களின் படியே தங்கள் செயல்பாடுகள் உள்ளதாக கூறியது. டெல்லி கலவரம், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டதற்காகவும், அநீதிக்கு எதிராக குரல் கொடுத்ததற்காகவும் தங்களை இந்திய அரசு பழி வாங்குவதாக அம்னெஸ்டி அமைப்பின் செயல் இயக்குநர் அவினாஷ் குமார் குற்றம்சாட்டினார். 

இந்நிலையில், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் செயல்பாடு தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த 20 ஆண்டுகளில் ஒரேயொரு முறை மட்டுமே அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், வெளிநாட்டு நிதியை பெற அனுமதி பெற்றிருந்தது. ஆனால் அதுபோன்ற அனுமதியை பெறுவதற்கான தகுதியை அந்த அமைப்பு பெறவில்லை என்பதால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்நிறுவனம் வெளிநாட்டு நிதிக்காக தொடர்ச்சியாக விண்ணப்பித்தபோதும், அவற்றிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எஃப்.சி.ஆர்.ஏ விதிகளை மீறும் வகையில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 4 நிறுவனங்களில் மிக அதிகளவிலான தொகையை அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் பிரிட்டன் அலுவலகம் வரவு வைத்தது. அந்த தொகை அந்நிய நேரடி முதலீட்டின் அங்கமாக வகைப்படுத்தி வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி குறிப்பிட்ட தொகையை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் கணக்கிலும் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி வரவு வைக்கப்பட்டது. அம்னெஸ்டியின் இந்த செயல்பாடு சட்டத்தை மீறும் வகையில் இருப்பதால், முந்தைய அரசுகளும் அம்னெஸ்டி அமைப்புக்கு வெளிநாட்டிலிருந்து நிதியை பெற அனுமதி வழங்கவில்லை. எந்தவித பாரபட்சமும், சார்பும் இன்றி மத்தியில் ஆட்சியில் இருந்த எல்லா அரசுகளாலும், அம்னெஸ்டி அமைப்பின் வெளிநாட்டு நிதி பெறும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் இருந்தே, அந்த அமைப்பின் மீதான நடவடிக்கை சட்டப்பூர்வமானது மற்றும் நியாயமானது என்பது தெளிவாகிறது. அம்னெஸ்டி அமைப்பு, தங்களது செயல்பாடுகளுக்கு மோசமான நடைமுறைகள் மூலம் நிதியை பெற முயற்சி செய்திருக்கிறது.

மனிதநேய பணிகள் மற்றும் அரசாங்கத்திடம் உண்மையை பேசுவது குறித்து அம்னெஸ்டி வெளியிடும் அறிக்கைகள் அனைத்துமே, இந்திய சட்டங்களை மீறி செயல்படும் அதன் நடவடிக்கைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கான சூழ்ச்சி. இந்தியாவில் மனிதநேய பணிகளை மேற்கொள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதேவேளையில், வெளிநாடுகளால் நன்கொடையாக வழங்கப்படும் நிதியைக்கொண்டு உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதை இந்திய அரசும் சட்டமும் அனுமதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 

click me!