'கேரள மக்கள் காங்., இடதுசாரிகள் மீது கோபமாக இருக்கிறார்கள்': அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்புப் பேட்டி

By SG Balan  |  First Published Apr 23, 2024, 4:14 PM IST

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஏசியாநெட் நியூஸுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியின் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஏசியாநெட் நியூஸுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியின் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சராக இருக்கிறார். இன்டெல் பிராசஸரின் வடிவமைப்பாளர், இந்தியாவில் மொபைல் புரட்சியை ஏற்படுத்தியவர், 18 ஆண்டுகளாக ராஜ்யசபா உறுப்பினராகவும் இருக்கிறார்.

கேள்வி 1 – ராஜீவ் சந்திரசேகர் அவர்களை வரவேற்கிறோம். நீங்கள் திருவனந்தபுரம் வேட்பாளராக வந்து ஒன்றரை மாதம் ஆகிறது. இங்கு பலரை சந்தித்து இருக்கிறீர்கள். பல இடங்களைப் பார்வையிட்டிருக்கிறீர்கள். திருவனந்தபுரம் ராஜீவ் சந்திரசேகருக்கு வரவேற்பு அளிக்கிறதா?

Latest Videos

undefined

பதில் - மார்ச் 6ஆம் தேதி மாலையில் இருந்து, தொகுதியின் அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து, பலரைச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளையும் கேட்டறிந்தேன். முதல் 2-3 நாட்களில் எதிர்க்கட்சிகள் என்னை ‘வெளியாள்’ என்று கூறி பிரசாரம் செய்தனர். இருப்பினும், அவர்களின் வியூகம் தோல்வியடைந்தது. நான் நேர்மையாக வேலை செய்பவன் என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர். அதனால் நான் டெல்லியில் இருந்து வருகிறேன் என்ற எண்ணம் எனக்கு இல்லை. சொந்த மண்ணான கேரளாவுக்கு வந்து திருவனந்தபுரம் எம்.பி.யாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் மலையாளி என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அது எனக்கு மிக முக்கியமானது.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

கேள்வி 2 - நீங்கள் இப்போது திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறீர்கள். இங்கே சொந்தமாக வீடு வாங்கப்போவதாகவும் கூறியிருக்கிறீர்கள்...

பதில் - 100 சதவீதம் அது நடக்கும். தற்போது, வாடகை குடியிருப்பில் வசிக்கிறேன். 26ஆம் தேதி தேர்தலுக்குப் பிறகு எனது முதல் வேலை புதிய வீட்டைத் தேடுவதுதான். முதன்முறையாக இங்கு வந்தபோது மும்முனைப் போட்டி இருக்கும் என்று நினைத்தேன். 10-15 நாட்களில் மக்களின் துயரங்களையும் பிரச்சனைகளையும் புரிந்துகொண்ட பிறகு, இப்போது மக்களுக்கு சேவை செய்வதே எனது பணியாக மாறியுள்ளது. இதை நான் நேர்மையாகச் சொல்கிறேன், அரசியலுக்காக அல்ல.

கேள்வி 3 - 'இனி வேலை நடக்கும்' என்பது உங்கள் தேர்தல் முழக்கம். ஏன் இப்படி ஒரு கோஷத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

பதில் - இங்கு ஒரு காங்கிரஸ் எம்.பி.க்கு 15 ஆண்டுகளாக மூன்று முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன் சி.பி.ஐ.(எம்) பன்னியன் சாருக்கு ஐந்தாண்டுகள் வழங்கப்பட்டது. (பன்னியன் ரவீந்திரன்). இன்று, 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக வாக்களித்த இளைஞர்களுக்கு 38 வயது இருக்கும். அவர்களுக்கு என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? தற்போது, கல்லூரிகளில் 37 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. திருவனந்தபுரத்தில் வேலைவாய்ப்பு மற்றும் முதலீடுகள் இல்லாத நிலை உள்ளது. பூதக்கண்ணாடியில் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த சூழ்நிலையில் மாற்றம் அவசியம். என்று வலுவாக நம்புகிறேன். நான் 'இனி வேலை நடக்கும்' என்று சொல்கிறேன். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் ஒரு தொழிலாளி, இங்கு வேலை செய்ய வந்துள்ளேன். எனக்கு வேலை செய்யும் திறன் உள்ளது. இதைச் சொல்வத்றகாகவே 'இப்போது வேலை நடக்கும்' என்று எனது பிரச்சாரத்தைத் தொடங்கினேன்.

கேள்வி 4. உங்களுக்கு பல மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் தொடர்பு உள்ளது. அது ஒரு சிறப்பு அரசியல் உத்தியா?

பதில் - இல்லை. என்னிடம் சிக்கலான அரசியல் உத்தி எதுவும் இல்லை. நான் என்ன செய்தாலும் எல்லாமே பொதுமக்களுக்காகத்தான். நாம் விக்சித் பாரத் அல்லது திருவனந்தபுரத்தின் முன்னேற்றம் பற்றி பேசும்போது, பெரிய பங்காற்றுபவர்கள் மாணவர்களும் இளைஞர்களும்தான். அவர்கள் ஈடுபடவில்லை என்றால், எதுவும் நடக்காது. இப்போது திருவனந்தபுரம் அல்லது கேரளாவின் சிறப்பு என்ன? கல்லூரிகளில் 37 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் படிப்புக்காக இடம்பெயர்கின்றனர். இங்கு எத்தனையோ திறமையான மாணவர்கள் இருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று வெற்றி பெற்று வருகின்றனர். அது ஏன் இங்கே நடக்கவில்லை? இது ஒரு சாதாரண கேள்வி. ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நான் எம்.பி.யானால் இன்னும் 5 வருடத்தில் திறமை இல்லாத ஒரு குழந்தைகூட இருக்காது என்று அறிவித்திருந்தேன். அனைவரும் ஒரு தொழில் செய்வதற்கான திறமையை இலவசமாக வழங்க நான் தயாராக இருக்கிறேன். இந்திய அரசும் அதைச் செய்யத் தயாராக உள்ளது. அறிவிப்பு வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகு, நான் ஒரு கோவிலுக்குச் சென்றபோது, ஒரு தாய் என் கையைப் பிடித்து, இந்த யோசனை தனது மகனுக்கு பிடித்திருப்பதாக என்னிடம் கூறினார். அதனால்தான் இளைஞர்கள்தான் நாட்டிற்கும், மாநிலத்திற்கும், திருவனந்தபுரத்திற்கும் ஆற்றல் என்பதை வலியுறுத்துகிறேன். அவர்களை ஊக்குவித்து, வளர்த்து, அவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தமளிப்பதே எனது நோக்கம். 3 ஆண்டுகள் அமைச்சராக இருந்த எனக்கு தனிப்பட்ட முறையில் 88 கல்லூரிகள் உள்ளன. அது அரசியலுக்காக அல்ல, இன்றைய சுதந்திர இந்திய வரலாற்றில் தாங்கள்தான் அதிர்ஷ்டசாலி தலைமுறை என்பதைச் சொல்ல. ஸ்டார்ட் அப்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளன. நான் திறன் வளர்ச்சி அமைச்சராக இருந்து இவற்றையெல்லாம் பார்த்து வருகிறேன். இந்தியத் திறமையாளர்களுக்கு பெரும் கிராக்கி இருப்பதைப் பார்க்கலாம். அமெரிக்கா, ஜெர்மன் அல்லது ஐரோப்பிய நிறுவனங்கள் இந்திய இளைஞர்களை திறமை மிக்கவர்களாகவே பார்க்கிறார்கள். ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம், சுமார் 500 முதல் 700 மாணவர்கள் ஜப்பானுக்கு ஒப்பந்த அடிப்படையில் விவசாயம், கோழி வளர்ப்பு போன்ற வேலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிறிய குடும்பங்களைச் சேர்ந்த 75 செவிலியர்கள் ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் ஜெர்மன் மொழியைக் கற்று, மாதம் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இதுதான் ஒரு அரசியல் தலைவரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். எதிர்காலத்தை உருவாக்கவே பொதுவாழ்வில் நுழைந்துள்ளோம். அதுதான் எங்கள் அரசியல்.

கேள்வி 5 –  எந்தவித சர்ச்சையிலும் ஈடுபடாமல் செயல் அரசியலில் கவனம் செலுத்துவதாகச் சொல்கிறீர்கள்...

பதில் - நீங்கள் ஒருவரைப் பற்றியோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றைப் பற்றியோ பொய்களைச் சொன்னால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? கடந்த 18 வருடங்களாக நான் செய்துவருவது செயல் அரசியல்தான். மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும் திறமை என்னிடம் உள்ளது என்று கூறி 2006ல் அரசியலில் இணைந்தேன். இடதுசாரிகள் இதைப் புரிந்துகொள்ள முடியாது. கடந்த 10 ஆண்டுகளைப் பார்த்தால், 2014 மற்றும் 2019 மற்றும் இப்போது 2024 ஆகிய ஆண்டுகளில் நரேந்திர மோடிக்கு ஏன் சிறந்த ஆதரவு கிடைக்கிறது? அவர் கடினமாக உழைக்கிறார் என்பதே இதற்குக் காரணம். மக்களை முன்னுக்கு கொண்டுவந்தார். பலருக்கு வீடுகள், தண்ணீர் வசதி, வேலை வாய்ப்புகள் - இதுதான் செயல் அரசியல். 1970கள் மற்றும் 80களில், எப்போதும் ' வறுமையை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம்' என்று கத்திக்கொண்டிருந்த கட்சி உண்மையில் எந்த வறுமையையும் ஒழிக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் இது நடக்கிறது. மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இடதுசாரி கட்சிகள் இரண்டுமே புரிந்துகொள்ளவில்லை. தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு இதுவரை ஆட்சியைப் பற்றியோ, வளர்ச்சியைப் பற்றியோ ஏதாவது யோசனையை முன்வைத்தார்களா? இல்லை. அவர்களுக்கு வளர்ச்சி, முன்னேற்றம் அல்லது மக்கள் வாழ்வில் கொண்டுவரக்கூடிய மாற்றம் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. நாங்கள் வளர்ச்சி மற்றும் எதிர்கால நலனில் கவனம் செலுத்துகிறோம். எனது பணியில் எதிலும் கவனம் சிதற மாட்டேன். வளர்ச்சி, முன்னேற்றம், மாற்றம் பற்றி மட்டுமே பேசுவேன். நீங்கள் (எதிர்க்கட்சிகள்) என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நான் அன்றைக்கு சொன்னதையே இன்றும் நாளையும் சொல்வேன்.

கேள்வி 6. வாக்குக்குப் பணம், வேட்புமனுவில் சொத்து விவரம் குறித்த சர்ச்சைகளில் சிக்குவதைவிட அவற்றை சட்டரீதியாக எதிர்கொள்வதாக இருக்கிறீர்களா?

பதில் - இவை அனைத்தும் பொய். கடந்த 18 ஆண்டுகளில் நான் அறிவித்ததை மாற்ற நான் முட்டாளா? இது ஒரு அரசியல் பொறி. நான் 'செயல் அரசியல்' என்று பேசும்போது, அவர்கள் 'பொய் அரசியல்' பேசுகிறார்கள். நான் ஓட்டுக்காக பணம் விநியோகிக்கிறேன் என்று சசி தரூர் கூறியது எனது நேர்மை மீதான தாக்குதல். நான் இந்த 18 ஆண்டுகாலத்தில் களங்கமில்லாத அரசியலை நடத்தி இருக்கிறேன். என் அரசியலை பொய்யால் எதிர்கொண்டால் நான் சும்மா விடமாட்டேன். எனவே, நான் ஒரு நோட்டீஸ் அனுப்பினேன். பின்னர் அவர் (சசி தரூர்) சில தொலைக்காட்சி பேட்டிகளில் தான் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று கூறினார். அவரது பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நானும் கிரிமினல் புகார் அளித்துள்ளேன்.

கேள்வி 7 - முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே இருக்கிறது... அது எதையாவது உணர்த்துகிறதா?

பதில் - எனக்குத் தெரியாது. நான் கருத்துக்கணிப்பு ஆய்வாளர் அல்ல. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் நரேந்திர மோடிஜி யாரிடமும் பாரபட்சம் காட்டவில்லை என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் மற்றும் பழங்குடியினர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் வீடுகள், தடுப்பூசிகள், இலவச ரேஷன் பொருள்கள், ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் ஆதரவும் உதவியும் அனைவருக்கும் சமமாக அளிக்கப்படுகிறது.

கேள்வி 8 - ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் மும்முனைப் போட்டி நடப்பதாக கூறுகிறார். ஆனால் சசி தரூர், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்கிறார்.

பதில் - சசி தரூரும் காங்கிரஸும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். முஸ்லீம் வாக்குகளை காங்கிரஸுக்கு பின்னால் ஒருங்கிணைக்க நினைக்கிறார்கள். அவ்வளவுதான். தெலுங்கானாவில் என்ன செய்தார்கள். அது ஒரு கேலிக்கூத்து. அவர் (சசி தரூர்) தான் ஒரு உலகளாவிய குடிமகன், படித்தவர் என்று கூறுகிறார். மறுபுறம் களத்தில் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்.

Q9. ஒரு நேர்காணலின் போது, சசி தரூர் உங்களை கேலி செய்தார், ராஜீவ் சந்திரசேகரின் முழக்கமான 'செயல் அரசியல்' என்பதில் செயல் என்ற வார்த்தைக்கு உண்மையான பொருள் நடிப்பு என்று கூறினார். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் - வேறொன்றும் சொல்வதற்கில்லை என்பதால், என்னுடைய நடிப்புத் திறமையைப் பற்றி அவர் கருத்து சொல்லியிருக்கிறார். அது பரவாயில்லை. இதுபோன்ற விஷயங்களுக்கு நான் பதிலளிக்கமாட்டேன். டி.கே.சிவகுமார், சசி தரூர், ராகுல் காந்தி ஆகியோரின் சான்றிதழ் எனக்கு வேண்டாம். நான் யாருக்காகப் பணியாற்றி இருக்கிறேனோ அவர்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். சசி தரூர் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட டி.கே.சிவகுமார் இப்போது ஜாமீனில் உள்ளார். அவர் மீது பணமோசடி தொடர்பாக பல வழக்குகள் உள்ளன. கர்நாடகாவில் அவர் மூத்த காங்கிரஸ் தலைவர். எனக்கு அந்த மாதிரியான குணாதிசயம் தேவையா? சட்டப்பிரிவு 19 இன் கீழ் கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. முட்டாள்தனமாக இருப்பதற்கும் சுதந்திரம் உண்டு.

கேள்வி 10 - திருவனந்தபுரத்திற்காகப் பல திட்டங்கள் இருப்பதாகக நீங்கள் திரும்பத் திரும்ப கூறிவருகிறீர்கள். அந்தத் திட்டங்கள் என்னென்ன?

பதில் – அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் சேகரித்து, பொதுமக்களிடம் கருத்தையும் கேட்டபின் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான் செய்யப்போகும் விஷயங்களைக் குறிப்பிடும் 'இதானு காரியம்' (இதுதான் செயல்திட்டம்) என்ற அறிக்கையை வெளியிடுவேன். அதில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். நான் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றக்கூடியவன். எனவே இது எனது ஐந்தாண்டு திட்டமாக இருக்கும். திருவனந்தபுரத்தை மாற்றவும் மேம்படுத்தவும் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அதில் இருக்கும்.

கேள்வி 11 – அப்படியானால், அது தெளிவான அறிக்கையாக வெளியிடப்படும் இல்லையா...

பதில் – ஆம். அது ஆன்லைனிலும் கிடைக்கும்.

கேள்வி 12 - அந்த அறிக்கையில் திருவனந்தபுரத்திற்காக முக்கிய வாக்குறுதிகள் ஏதேனும் இருக்கிறதா?

பதில் - கடலோர மக்களுக்காக, திருவனந்தபுரம் நகருக்காக, நெய்யாற்றின்கராவுக்கு, பாறசாலைக்கு என்ன செய்யப் போகிறேன், சுற்றுலாத் துறை, தொழில்நுட்பத் துறையில் என்ன செய்யப் போகிறேன் என எல்லாவற்றையும் எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விளக்கும் விரிவான அறிக்கையாக இருக்கும்.

கேள்வி 13 – 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெறும் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியடைந்தது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால் நெய்யாற்றின்கரா, பாறசாலா, கோவளம் போன்ற இடங்களில் பாஜக பின்னடைவைச் சந்திக்கிறது. இந்த இடங்களில் வாக்காளர்களைக் கவர முடிந்ததா?

பதில் - நெய்யாற்றின்கரா, பாறசாலை, கோவளம் பகுதிகளுக்குப் போனேன். எனது தொலைநோக்கு அறிக்கையில் இந்த பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புகளை உருவாக்குவதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த இடங்களிலும் டெக்னோபார்க் வரவேண்டும். 590 கிலோமீட்டர் நீளமுள்ள கடலோரப் பகுதியைபக் கொண்ட கேரளாவில் மீன்வளத்துறை ஏன் மிகவும் பலவீனமாக உள்ளது? எனது அறிக்கையில் குழந்தைகள் மற்றும் அடுத்த தலைமுறைக்கு அதிகாரம் அளிக்கும் பல யோசனைகள் உள்ளன. எங்கள் பிரச்சாரம் நகரத்தை மையமாகக் கொண்டதல்ல.

கேள்வி 14 - கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும்போது, அரசியல் தலைவர்களிடம் மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பிரச்சினைகளையும் சவால்களையும் முன்வைக்கிறார்கள். ஒரு வீடியோவில், நீங்கள் ஒரு காரின் பானெட்டில் பெரிய தாளை விரித்து வைத்துக்கொண்டு, மக்களுக்கு விளக்கம் அளிக்கிறீர்கள். கரையோர மக்களுடன் இப்படித்தான் உரையாடுகிறீர்களா?

பதில் – அவர்களுக்கு வீடு, குடிநீர், வாழ்வாதாரம், கடற்கரை என எதுவும் இல்லை. அவர்களின் எதிர்காலம் பற்றி யாரும் பேசுவதில்லை. நான் விழிஞ்சம் துறைமுகத்திற்குச் சென்றபோது, எத்தனையோ முறைகேடுகள் பற்றிக் கேட்டறிந்தேன், மக்களின் கோபத்தைக் கண்கூடாகப் பார்த்தேன். அவர்கள் 'நீங்கள் வாக்குக்காக மட்டுமே வருகிறீர்கள். எங்கள் பிரச்னைகளுக்கு யாரும் தீர்வு காணவில்லை’ என்றார்கள். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னேன். விழிஞ்சம் துறைமுகத்தில் உள்ள பெண்கள் கடந்த 10 ஆண்டுகளாக கழிப்பறை கட்டிக்கொடுக்குமாறு கேட்கிறார்கள். 15 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளைக் கூட மாநில அரசோ அல்லது எம்.பி.க்களோ செய்து கொடுக்க முடியாவிட்டால் அவர்கள் ஏன் பொது வாழ்வில் இருக்கிறார்கள்? நான் அப்படிப்பட்ட அரசியல் செய்யமாட்டேன். என்னால் எதுவும் செய்ய முடியாவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன். தவறான நிதி நிர்வாகத்தால், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதற்குக்கூட மாநில அரசிடம் பணம் இல்லை என உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். இதுவரை இரு கட்சிகளுக்கே மக்கள் வாக்களித்தனர். மக்கள் இப்போது கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் சலித்துவிட்டார்கள், எனவே நான் அவர்களிடம் பொறுமையாகப் பேசி நான் என்ன செய்வேன் என்பதை விளக்கினேன். நான் வேறு விதமான அரசியல்வாதி, என்னை நம்புங்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். பணியாற்றவும் சேவை செய்யவும் இந்தத் தொகுதியைத் தேர்வு செய்தேன். நரேந்திர மோடிஜியும் எனது கட்சியும் என்னை டெல்லி அல்லது பெங்களூரு போன்ற தொகுதிகளில் போட்டியிடச் சொன்னார்கள், ஆனால் முதலில் திருவனந்தபுரத்தைத் தேர்ந்தெடுத்தது நான்தான். எதற்காக? இங்கே வேலை செய்ய வேண்டும் என்பதற்காக.

கேள்வி 15. இந்தியா டிஜிட்டல் பொருளாதாரமாக மாறி வரும் சூழலில், திருவனந்தபுரம் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

பதில் - 1996ல் நான் இங்கு மொபைல் நெட்வொர்க் அமைக்க இங்கு வந்தபோது பெங்களூரு, சென்னை, குருகிராம் அல்லது மும்பையில் டெக்னோபார்க் என்ற கருத்து இல்லை. அந்த வகையில், தொழில்நுட்பத் துறையில் திருவனந்தபுரம் ஒரு முன்னோடி நகரமாக இருந்தது. அந்த நேரத்தில் கெல்ட்ரான் இருந்தது, ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது, இருப்பினும், கடைசியாக என்ன ஆனது? அடுத்த டிஜிட்டல் அலையில் திருவனந்தபுரம் 12, 16 அல்லது 18வது இடத்தில் உள்ளது. இது ஏன்? காங்கிரசுக்கும் ஆளும் எல்.டி.எப்-க்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை. திருவனந்தபுரம் பாதுகாப்பான நகரம் என்ற கருத்தை உருவாக்க வேண்டும். உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், முதலீட்டு வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

நான் எம்.பி.யாவும் அமைச்சராகவும் ஆனால் திருவனந்தபுரத்தில் உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டை நடத்துவேன். தென்னிந்தியாவின் முன்னணி கண்டுபிடிப்பு மையமாக திருவனந்தபுரத்தை மாற்றும் தொலைநோக்கு பார்வை எனக்கு உள்ளது.

கேள்வி 16 - ஒரு அமைச்சராக, மாநில அரசு உங்கள் உதவியை எப்போதாவது கேட்டிருக்கிறதா?

பதில் - இல்லை... ஆனால் கேரளாவுக்கு முதலீடுகளை அனுப்பச் சொல்லி அணுகியுள்ளனர். ஆனால் அதை எப்படி அனுப்புவது? ஆப்பிள், சாம்சங் போன்றவற்றின் சுமார் 8 மொபைல் போன் சப்ளையர்கள் தங்கள் தொழிற்சாலைகளை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசனை பெற என்னைச் சந்தித்தனர். பதவி, பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் இருந்ததால் அவர்களின் முதல் விருப்பம் சென்னைதான். ஆனால், செலவு அதிகம் என்பதால் சென்னைக்கு செல்ல அவர்கள் தயாராக இல்லை. இரண்டாவது விருப்பம் நொய்டா. நான் அவர்களிடம் ‘ஏன் கேரளா இல்லையா? அழகான இடம்...’ என்று கேட்டேன். 'இல்லை இல்லை. கேரளாவில் நடந்த வன்முறை குறித்து கேள்விப்பட்டுள்ளோம்' என்றனர். எனவே இங்கு முதலீடு செய்தால் பாதுகாப்பு இல்லை என்று கருதுகின்றனர். அவர்கள் கிடெக்ஸ் கதையைப் அறிந்துள்ளனர். நான் செய்யப்போவது திருவனந்தபுரத்தில் இந்திய அரசின் தொழிற்சாலை. எங்களிடம் உற்பத்தி மையங்களுக்கு நிதியளிக்க பல திட்டங்கள் உள்ளன. அதற்கு, கேரள அரசின் உதவியை நான் நிச்சயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

திருவனந்தபுரத்தில் எலெக்ட்ரானிக் துறையின் வளர்ச்சி துறைமுகத்தில்தான் உள்ளது. துறைமுகத்தின் வளர்ச்சிக்கு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியும் ஒரு முக்கியத் தேவை. இதையெல்லாம் செயல்படுத்த, ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். கேரளாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறைகளைத் தவிர வேறு துறைகளில் எதையும் செய்ய முடியாது என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது. அதற்கு என்ன பொருள்? இங்கு மீன்வளம் இல்லையா? விவசாயம் செய்யமுடியாதா? கைவினைப்பொருட்கள், உற்பத்தி எதுவும் முடியாதா? அப்படியானால் மக்கள் இவற்றைச் செய்துகொண்டிருப்பது எப்படி? அவர்கள் மூட்டை கட்டிக்கொண்டு இங்கிருந்து கிளம்ப வேண்டுமா?

நான் உலகளாவிய குடிமகன் அல்ல. பொது அறிவுடன் சொல்கிறேன். மாநில அரசிடம் தெளிவான பொருளாதார பார்வை இல்லை. அதுதான் இந்த நிலைக்குக் காரணம். ஓய்வூதியம், சம்பளம் வழங்க நிதி இல்லை, நான் கே.எஸ்.ஆர்.டி.சி-க்கு சென்றபோது, மூன்று மாதங்களாக சம்பளம் வரவில்லை என்று சிலர் என்னிடம் புகார் கூற வந்தனர்.

கேள்வி 17 - மத்திய அரசு பணம் தருவதில்லை என மாநில அரசு குற்றம் சாட்டுகிறதே.

பதில் - அது பொய். உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவில், ‘பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்திருந்தால், மத்திய அரசை அணுகுவதற்கு அதைக் காரணமாகக் கூற முடியாது’ என்று கூறியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் விவசாய உற்பத்தியும், தொழில்துறை உற்பத்தியும் குறைந்துள்ளது. பணம் அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை. இப்படி இருந்தால் எந்த மாநிலம் வெற்றி பெறும்?

அந்த நாட்களில், உ.பி., உற்பத்தி இல்லாத மாநிலமாக, எப்போதும் பற்றாக்குறை மற்றும் வருவாய் இல்லாத மாநிலமாக கருதப்பட்டது. மத்திய நிதியில் அவர்கள் பிழைத்து வந்தனர்... இது அன்றைய கதை. இப்போது என்ன நிலைமை? அது நிதி வழங்கும் மாநிலமாக மாறிவிட்டது.

மார்க்சியத்தைப் பற்றி எப்பொழுதும் பெருமை பேசும் கேரளத் தோழர்களிடம் எனக்கு ஒரு எளிய கேள்வி உள்ளது. மார்க்சியத்தின் பொருளாதாரக் கருத்தியல் எங்கே வெற்றிகரமாகச் செயல்பட்டது?

கேள்வி 18 - சமூகத் தலைவர்களின் பதில் எப்படி இருக்கிறது?

பதில் - எல்லோரும் ஒரு சிறந்த நாளையும் எதிர்காலத்தையும் விரும்புகிறார்கள். அந்த மாதிரியான மனநிலையோடுதான் அவர்களைச் சந்தித்தேன். முஸ்லிம் சமூகம், கிறிஸ்தவ சமூகம், நாயர் சமூகம், ஈழவ சமூகம், ஓபிசி உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரையும் சந்தித்து வருகிறேன்.

கேள்வி - 19 தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்கள் சந்தித்த இதயத்தைத் தொடும் தருணங்கள் ஏதேனும் உண்டா?

பதில் – எத்தனையோ இருக்கின்றன. இப்படிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள தனியாக நேரம் தேவைப்படும். சத்தியமாக, நான் இங்கு வந்தபோது, திருவனந்தபுரம் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. முன்பு நகரப் பகுதிகளை மட்டுமே பார்த்திருந்தேன். கடலோரப் பகுதிகள் மற்றும் ராஜாஜி நகர் போன்ற பகுதிகளில், மக்கள் குடியிருப்புகள் இல்லாததால், திடக்கழிவு மேலாண்மை இல்லாத பரிதாபமான சூழ்நிலையில் உள்ளனர். திருவனந்தபுரத்தில் ஏராளமானோர் வாழ்வாதாரமற்று இருக்கின்றனர். இப்போது அவர்களுக்கு வீடுடோ, குடிநீரோ, வேலையோ இல்லை. இருந்தும் சிலர் இதை 'கேரளா மாடல்' தலைநகரம் என்று கூறிக்கொள்கின்றனர்.

நான் உணர்ச்சிவசப்பட்டேன். இந்தச் சூழ்நிலை என்னைப் பாதித்திருக்கிறது. இப்போது நான் இதை ஒரு போட்டியாக பார்க்கவில்லை, எனது பணியாகப் பார்க்கிறேன் என்று எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளேன். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்தேன். அது எனது கவனத்தை ஒருமுகப்படுத்த உதவியது. எதிர்க்கட்சிகள் என்னைத் தாக்கினாலும், நான் கவனம் சிதறவில்லை. மக்கள் என்னிடம் வந்து பல மாதங்களாக ஓய்வூதியம் இல்லை, சம்பளம் வழங்கவில்லை என தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையாகக் கூறுவதும் அதற்கு ஒரு காரணம். ஓய்வூதியம் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்கள் ஓய்வூதியத்தை நம்பியிருக்கிறார்கள்.

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது குறித்து முதலில் பரிசீலிக்க மத்திய நிதியமைச்சரைக் கேட்டுக்கொள்வதாக எனது அறிக்கையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளேன்.

கேள்வி 20 - கேரளாவை மையமாக வைத்து மத்திய அரசின் திட்டம் ஏதும் உள்ளதா?

பதில் – கண்டிப்பாக இருக்க வேண்டும். நான் வெற்றி பெற்றால், பிரதமர் மோடி நிச்சயமாக எனக்கு ஒரு இலாகாவை வழங்குவார். ஆனால் அதே நேரத்தில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அமைச்சராக எனக்கு ஒரு இலாகா கிடைக்கும். பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது எனது உறுதிப்பாடாக இருக்கும். அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் குடிமக்கள் குறைதீர்க்கும் பிரிவு அமைப்பேன். மக்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம், அது என்னை வந்தடையும். நான் ஒரு தீர்வை கொண்டுவர முயல்வேன். எனது தொலைபேசி மற்றும் எனது உதவியாளரின் தொலைப்பேசி எண் பொதுவெளிவில் இருக்கும். திருவனந்தபுரத்தில் 24 மணிநேரமும் இருப்பேன் என்பதை மக்களுக்குச் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி 21 - உங்கள் தொலைநோக்குப் பார்வையை மக்கள் புரிந்துகொள்கிறார்களா, ஏனென்றால் பொதுவாக மக்கள் இதை தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே பார்ப்பார்கள்.

பதில் - அதுவும் சரிதான். இடதுசாரி கட்சிகள் இரண்டும் அரசியல்வாதிகள் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளன. இதற்கு அந்தக் கட்சிகள்தான் முழு பொறுப்பு. நான் அரசியலில் பதவி பெற இங்கு வரவில்லை. இந்த விஷயத்தை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். நான் டெல்லியில் கிடைக்கும் இலவச வீட்டுக்காகவோ அல்லது சர்வதேசத் தரத்தில் வாழ்க்கை முறையை வேண்டியோ எம்.பி.யாக வரவில்லை. எனக்கு வாக்களித்து இங்கு பணிபுரிவதற்கான வாய்ப்பை வழங்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த நகரத்தில் மாற்றங்களைக் கொண்டுவர எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறேன்.

கேள்வி 22 - 'நாம் சொல்வதைக் கேட்கக்கூடியவர் ஒருவர் இருக்கிறார், நாம் சொல்வதை இவரால் புரிந்துகொள்ள முடியும்...' என்ற நம்பிக்கையை நீங்கள் காண்கிறீர்களா?

பதில் - கடலோரப் பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் அணு அறிவியல் பிரச்சனைகள் அல்ல. ஆர்வமோ, விருப்பமோ இருந்தால் எல்லோருக்கும் பிரச்சனைகள் புரியும். உதாரணமாக வலியத்துறை பாலம் சேதமடைந்து காணப்பட்டது. நான் அங்கு 1.5 மணிநேரம் செலவிட்டேன், அங்கிருந்த அனைவருடனும் கலந்துரையாடினேன். அந்த உரையாடல்களிலிருந்து, நான் பல யோசனைகளைப் பெற்றேன். இந்த யோசனைகளை மத்திய மீன்வள அமைச்சகத்திடம் நான் பகிர்ந்துகொண்டபோது, அவர்கள் ஆச்சரியமடைந்தனர். இதற்கு முன்பு அவற்றை பரிசீலிக்கவில்லை என்று ஒப்புக்கொண்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எனது முதல் அலுவலகம் கடலோரப் பகுதியில்தான் இருக்கும். ஜூன் 5ஆம் தேதியில் இருந்து 6-8 மாதங்களில் வலியத்துறை பாலம் சீரமைக்கப்படும். தெளிவாகத் தெரியும் இந்தப் பிரச்சனைக்கு தெளிவான தீர்வும் உள்ளது. நான் நாடாளுமன்றத்தில் கடிதங்கள் எழுதி கேள்வி கேட்க விரும்பவில்லை. பிரச்சனையைத் தீர்த்து வைப்பேன். பொழியூரில் ஒரு மாஸ்டர் பிளான் வைத்துள்ளேன். மாநில அரசின் தாமதம் காரணமாகவே தாமதம் ஏற்படுகிறது. மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்களே நடவடிக்கை எடுப்போம். மக்கள் எழுப்பிய கோரிக்கைகள் சிக்கலானவை அல்ல. அனைத்தும் அடிப்படைத் தேவைகள்.

கேள்வி 23 - ராஜீவ் சந்திரசேகர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வெற்றிகரமாக செயல்பட்ட பின்னணி கொண்டவர். 18 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்திருக்கிறார். ஆனால் மக்களவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடுகிறார். முதல் முறையில் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதா?

பதில் – நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது முதல்முறை. ஆனால் கட்சிக்காக பலமுறை கட்சிக்காகப் பணியாற்றி இருக்கிறேன். ஆனந்தகுமார் போன்ற நண்பர்களுக்காக பெங்களூருவில் பிரச்சாரம் செய்துள்ளேன். புதுச்சேரியில் பிரச்சாரப் பொறுப்பில் இருந்தேன். சொல்லப்போனால் இது எனக்குப் புதிய அனுபவம் அல்ல. நான் குறுக்கு வழியில் எதையும் செய்வதில்லை. மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான எனது செய்தியை மக்கள் விரும்புகிறார்கள். எனவே, தேர்தலில் நான் வெற்றி பெறுவேன். அது மக்களின் வெற்றியாக, திருவனந்தபுரத்தின் வெற்றியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

***

ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பேசுகிறார். அவர் களத்தில் மக்கள் முன் வைக்க திட்டங்களை வைத்திருக்கிறார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதைச் செயல்படுத்தும் உறுதியும் அவருக்கு இருக்கிறது. பல துறைகளில் வெற்றி பெற்றுள்ள அவர், இந்தத் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்றும் நம்புகிறார். ராஜீவ் சந்திரசேகர் வெற்றி பெற வாழ்த்துவோம்.

'துபாயில் கோயில் கட்டியதால்தான் வெள்ளத்தில் தத்தளிக்கிறது'; வைரலாகும் பாகிஸ்தானியரின் பேச்சு

click me!