இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026இல் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான பல்வேறு நிலையங்களை நிர்மாணிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026இல் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அகமதாபாத்-மும்பை வழித்தடத்தில் புல்லட் ரயிலுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறினார்.
“290 கிலோமீட்டருக்கும் அதிகமான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. எட்டு ஆறுகளின் மீது பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 12 ஸ்டேஷன்களில் பணி நடக்கிறது. அவையும் முடியும் நிலையில் உள்ளன. இதனால் மொத்தமாக பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது” என்று அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும், இரண்டு பணிமனைகளில் பணிகள் நடந்து வருவதாகவும், ஒட்டுமொத்தமாக 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை இயக்கும் வகையில் வேகமாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்தார்.
புல்லட் ரயில் மிகவும் சிக்கலான திட்டம் என்ற அவர், ரயில் மிக வேகமாக செல்வதால் அதிர்வுகளும் அதிகமாக இருக்கும் என்றார். “அந்த அதிர்வுகளை எவ்வாறு நிர்வகிப்பது? மின்சாரத்தில் இருந்து கரண்ட் எடுக்க வேண்டும் என்றால், அந்த கரண்டை எப்படி எடுப்பது? வேகம், ஏரோடைனமிக்ஸ் போன்ற அனைத்தையும் மிக கவனமாக பரிசீலித்து, அதன்பிறகு உடனடியாக வேலைகள் தொடங்கப்பட்டன.” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புல்லட் ரயிலுக்கான பணி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அதன் வடிவமைப்பை முடிக்கவே கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆனது என்பது கவனிக்கத்தக்கது.
“இடையில், கோவிட் தொற்றுநோயால் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரேவின் அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்ததால் திட்டம் தாமதமானது. ஆனால் தற்போது பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.” என அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி
புல்லட் ரயில் பாதையில் 21 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை உள்ளது. இதில் கடலுக்கு அடியில் 7 கிமீ நீளம் உள்ளது. சுரங்கப்பாதையின் ஆழமான புள்ளி 56 மீட்டர் ஆகும். சுரங்கப்பாதையின் உள்ளே புல்லட் ரயில்கள் மணிக்கு 300-320 கிமீ வேகத்தில் இயக்கப்படும். புல்லட் ரயில் என்றும் அழைக்கப்படும் ஜப்பானின் ஷிங்கன்சென் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மும்பை மற்றும் அகமதாபாத் இடையே வெகுஜன போக்குவரத்திற்காக அதிவேக ரயில் கட்டமைப்பை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.