
நாட்டிலேயே முதல்முறையாக காவலர் முதல் கிளார்க் வரை அனைத்தும் பெண்கள் மட்டும் பணியாற்றும் முதல் ரயில் நிலையம் மும்பை மாதுங்காவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இதையடுத்து, முற்றிலும் பெண்கள் மட்டும் பணியாற்றும் முதல் ரெயில்நிலையம் என்ற பெருமையை மாதுங்கா ரெயில் நிலையம் பெற்றுள்ளது.
மாதுங்கா ரெயில் நிலையத்தில் 30 பெண் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 11 டிக்கெட் பரிசோதகர்கள், 5 ரெயில்வே போலீஸ் பாதுகாப்பு படையினர், 7டிக்கெட் பரிசோதகர்கள் அடக்கம். ரெயில் நிலையத்தின் மேலாளராக மம்தாகுல்கர்கனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ரெயில் நிலையம் முறைப்படி தொடங்குவதற்கான நிகழ்ச்சி என விரைவில் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ரெயில் நிலையத்தின் மேலாளர் குல்கர்னி கூறுகையில், “ எங்களின் அனுபவம் மிக எளிதாக பணியாற்ற உதவும். என்னுடைய 25 ஆண்டுகள் அனுபவத்தில் இதுவரை முற்றிலும் பெண்களுடன் நான் வேலைபார்த்தது இல்லை. இப்போது நாங்கள் ஒரு குடும்பம் போல பணியாற்றி, பொறுப்புக்களை பகிர்ந்து கொண்டு, ஒத்துழைப்புடன் பணியாற்றி வருகிறோம்.
மேலும், பெண் டிக்கெட் பரிசோதகர்கள் ஆண் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது குறித்தும் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்துக்களில் அடிபடும் ஆட்களை எப்படி கையாள்வது என்றும் இதுவரை பெண் பணியாளர்களுக்கு தெரியவில்லை, அதுவும் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரெயில் நிலையத்தில் பணியாற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசார் கூட மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். ’’ எனத் தெரிவித்தார்.
பெண்களுக்கான ரெயில் நிலையம் குறித்த சிந்தனை மத்தியரெயில்வேயின் பொது மேலாளர் டி.கே.சர்மாவால் உருவானது. அவர்கூறுகையில், “ பெண்களுக்கு அதிகாரமளித்து, அவர்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய ரெயில்வே இந்தரெயில்நிலையத்தை உருவாக்கியது. இந்த ரெயில்வே நிலையம் அனைவராலும் பேசப்படும்’’ எனத் தெரிவித்தார்.