இத்தாலிய கண்ணாடியை கழட்டுங்க ராகுல்.. பிறகு எப்படி இந்தியாவின் வளர்ச்சி தெரியும்.? ராகுலுக்கு அமித் ஷா பதிலடி

By Asianet TamilFirst Published May 22, 2022, 9:57 PM IST
Highlights

“எட்டு ஆண்டுகளில் மோடி அரசு என்ன செய்தது என்று நம்முடைய காங்கிரஸ் நண்பர்கள் எப்போது பார்த்தாலும் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்."

இத்தாலிய கண்ணாடியை அகற்றிவிட்டு இந்திய வளர்ச்சியைப் பாருங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி தந்துள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, மோடி தலைமையிலான பாஜக அரசு மீது தொடர்ந்து புகார்களை கூறி வருகிறார். ராகுலின் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்திருக்கிறார். வட கிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, “எட்டு ஆண்டுகளில் மோடி அரசு என்ன செய்தது என்று நம்முடைய காங்கிரஸ் நண்பர்கள் எப்போது பார்த்தாலும் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். பிறகு எப்படி வளர்ச்சியை காண முடியும்? ராகுல் காந்தி அவர்களே.. நீங்கள் இத்தாலிய கண்ணாடியை கழற்றிவிட்டு இந்திய வளர்ச்சியை முதலில் பாருங்கள்.

இந்த எட்டு ஆண்டுகளில் அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாஜக அரசு மேம்படுத்தி உள்ளது. மாநிலத்தின் சுற்றுலாவையும் மேம்படுத்தி இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி வட கிழக்கு மாநிலங்களை பலமுறை பார்வையிட்டிருக்கிறார். அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்காக மோடி அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் வட கிழக்கு மாநிலங்களுக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். நானே இங்கு வருவது இது 14-வது முறை ஆகும். அப்படியெனில் பாஜக இந்தப் பிராந்தியத்துக்கு எவ்வளவு முக்கியத்துவத்தைத் தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வட கிழக்கு மாநிலங்களில் கடந்த 2019 முதல் இப்போது வரையிலான காலத்தில் 9, 000 போராளிகள் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர். அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்கள் இடையே நிலவும் மோதலைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா இந்த விஷயத்தில் மிகப் பெரிய பங்களிப்பை செய்துள்ளார்” என்று அமித் ஷா தெரிவித்தார்.
 

click me!