உயர்ந்தது பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம்... பேராசிரியர்களுக்கான ஊதியத்தையும் உயர்த்தியது AICTE!!

By Narendran SFirst Published May 22, 2022, 4:29 PM IST
Highlights

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது. 

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது. மேலும், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பொறியியல் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் 79 ஆயிரத்து 600 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 1 லட்சத்து 89 ஆயிரத்து 800 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு 67 ஆயிரத்து 900 ரூபாயாகவும் அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக 1 லட்சத்து 41 ஆயிரத்து 200 ரூபாயாகவும் அதிகபட்சமாக 3 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக 88 ஆயிரத்து 500 ரூபாயாகவும் அதிகபட்சமாக 1 லட்சத்து 94 ஆயிரத்து 100 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக 85 ஆயிரம் ரூபாயாகவும் அதிகபட்சமாக 1 லட்சத்து 95 ஆயிரத்து 200 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் 1 ஆயிரத்து 37 ஆயிரத்து 189 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பேராசிரியர்களுக்கு 2 லட்சத்து 60 ஆயிரத்து 379 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது எனவும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. திடீரென பொறியில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

click me!