
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரால் ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவராக வரும் 26 ஆம் தேதி, சோனியா காந்தி முறைப்படி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சிப் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தி வயது காரணமாக முன்பு போல் உற்சாகமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவதிவில்லை. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பார் என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இதை உறுதி செய்யும் வகையில், அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி வரக்கூடிய லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா காந்தியிடம், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி எப்போது பொறுப்பேற்ப்பார் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சோனியா, எல்லாம் விரைவில் நடக்கும் என கூறினார்.
இந்த நிலையில் இம்மாதம் 26 ஆம் தேதி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக சோனியா காந்தி முறைப்படி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 30 ஆம் தேதி கட்சியின் புதிய தலைவராக ராகுல் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில் நடக்க உள்ள தெலுங்கானா மாநில தேர்தல், விரைவில் நடக்க உள்ள இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்தே ராகுலிடம் கட்சியின் தலைமை பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டார தகவல் தெரிவிக்கின்றன.