வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய அசல் அடையாள அட்டை அவசியமாம்... மத்திய அரசு அடுத்த செக்!

First Published Oct 22, 2017, 3:40 PM IST
Highlights
original id proof need for deposit money in bank


வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யும்போது, தனிநபர்கள் அளிக்கும் நகல் அடையாள அட்டையை, அசல் அடையாள அட்டையோடு ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக வங்கிகள், நிதிநிறுவனங்களில் டெபாசிட் செய்யும்போது, அசல் அடையாள அட்டை, ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். சட்டவிரோத பணப்பரிமாற்ற விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறையின்படி, ஒரு தனி மனிதர் வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யும்போது, அவர் அளிக்கும் நகல் ஆவணங்களுடன், அசல் ஆவணங்களையும் அடையாள அட்டையையும் ஒப்பிட்டு அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்படுவதையும் தடுக்கலாம், கருப்புபணம் உருவாவதையும் தடுக்க முடியும். பங்கு வர்த்தகர்கள், சிட்பண்ட் நிறுவனம், கூட்டுறவு வங்கிகள், வீட்டு வசதி நிதிநிறுவனம், வங்கி சாராத நிறுவனங்கள் ஆகியவை இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

தனிமனிதர் ஒருவர் ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்தாலோ அல்லது, புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கினாலோ ஆதார் அட்டை, மற்றும் இதரஆவணங்கள் தேவை. அந்த ேநரத்தில் நகலாக அளிக்கும் ஆவணங்களோடு, அசல் ஆவணங்களையும் வங்கிஅதிகாரிகள் ஒப்பீடுசெய்து பார்க்க வேண்டும்.

வெளிநாட்டு கரன்சிமதிப்புகள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பரிமாற்றம் செய்யும்போது அளிக்கப்படும் நகல் ஆவணங்களோடு அசல் ஆவணங்களையும் ஒப்பிட்டுஅதிகாரிகள் சோதிக்க வேண்டும். இதன் மூலம், போலி ரூபாய் நோட்டுகள், சந்தேகத்துக்கு இடமான பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும்.

மேலும், வெளிநாடுகளுக்கு ரூ. 5லட்சத்துக்கு அதிகமாக பணம் பரிமாற்றம் செய்யும்போது, அசையா சொத்துக்கள் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக வாங்கும்போது, தனிநபர் அளிக்கும் நகல் ஆவணங்களை, அவரின் அசல் ஆவணங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

அதிகாரப்பூர்வமாக இருக்கும் ஆவணங்களில் இருக்கும் முகவரிகளும், தனிமனிதர் தற்போது குடியிருக்கும் முகவரியும் மாறி இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில்  தனிமனிதரின் வீட்டு தொலைபேசி மாத ரசீது, மின்கட்டண ரசீது, போஸ்ட்பெய்ட் செல்போன் ரசீது, குடிநீர்வரி, பைப் சமையல்கியாஸ் வரி ஆகியவற்றின் குறைந்தபட்சம் 3 மாத ரசீதுகளை அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளலாம்.

இதேபோல நகராட்சிக்கு செலுத்திய வரி ரசீது, அரசிடம் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பெறும் ஓய்வூதிய ரசீது உள்ளிட்டவற்றையும் அடையாள ஆவணமாக அளிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!