
விலை உயர்வு குறித்து தவறான புள்ளி விவரங்களை ராகுல் காந்தி தெரிவித்ததாக பா.ஜனதா கட்சியினர் குற்றச்சாட்டு கூறிய நிலையில், அதற்கு பதில் அளித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.
“நான் மோடியைப் போல் அல்ல, சாதாரண மனிதன் தான். என் தவறைசுட்டிக்காட்டிய பா.ஜனதா நண்பர்களுக்கு நன்றி’’ என ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு குறித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் டுவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதில், “ கடந்த 3 ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கியாஸ் சிலிண்டல், பருப்பு, வெங்காயம்,பால், தக்காளி ஆகியவற்றின் விலை 100 சதவீதம் உயர்ந்துவிட்டது. இதை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பி இருந்தார்.
ஆனால், ராகுல் காந்தியின் கேள்வியில் குறிப்பிடப்பட்ட விலை உயர்வு, பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்கள் தவறானவை என பா.ஜனதா கட்சி குற்றம்சாட்டியது. இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் ராகுல் காந்தியன் புள்ளிவிவரங்கள் தவறானவை எனக் கூறியது. இதையடுத்து, ராகுல் காந்தியின் டுவிட்டரில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டது.
இந்நிலையில், தன்னுடைய தவறான டுவிட்டுக்கும், புள்ளிவிவரங்களுக்கும் மன்னிப்பு கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் பதில் அளித்தார். அவர் கூறியதாவது-
என்னுடைய அனைத்து பா.ஜனதா நண்பர்களுக்கும் நான் சொல்வது என்னவென்றால், நான் மோடி சகோதரரைப் போல் அல்ல. நான் சாதாரண மனிதன்தான். அதனால்தான் தவறுகள் செய்வதும், நடைபெறுவதும் இயல்பாகிறது. அந்த தவறுகள்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக்குகிறது. என்னுடைய தவறை சுட்டிக்காட்டிய உங்களுக்கு நன்றி. தொடர்ந்து என்னுடைய தவறுகளை சுட்டுக்காட்டினால், என்னை நான் முன்னேற்றிக்கொள்ள உதவும். பா.ஜனதாவினர் அனைவரையும் விரும்புகிறேன்’’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.