கர்நாடக மாநிலத்தில் “பார்த ஜோடா யாத்ரா” நடைபயணம் நாளை தொடங்கவுள்ள நிலையில், குண்டலுப்பேட்டை பகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட பேனர்கள் மர்ம நபர்களால் கிழிந்தெறியப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தேதிய ஒற்றுமையை வலியுறுத்தி “பார்த ஜோடா யாத்ரா” எனும் நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய நடைபயணம் இன்றுடன் 22 நாட்கள் ஆகிறது. இதில் தமிழகத்தில் மொத்தமாக 4 நாட்களும் கேரளத்தில் 7 மாவட்டங்கள் வழியாக 19 நாட்களும் நடைபயணம் இருந்தது.
இந்நிலையில் நேற்றுடன் கேரளாவில் நடைபயணம் முடிந்த நிலையில், இன்று கூடலூர் வரும் ராகுல் காந்தி, அங்கு 6 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து செப்.30 ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதனிடையே சாமராஜநகர் மாவட்டம் வழியாக நாளை தேசிய ஒற்றுமை வலியுறுத்தி நடைபயணம் செல்ல உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்று, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 40 க்கும் மேற்பட்ட போஸ்டர், பேனர்களை மர்மநபர்கள் கிழிந்தெறிந்துள்ளனர்.
மேலும் படிக்க:Indian Railways: அக்டோபர் 1 முதல் ரயிலில் சரக்குக் கட்டணம் உயர்கிறது: காரணம் என்ன?
குண்டலுப்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களை பாஜகவினர் கிழித்துள்ளனர் என்று கர்நாடக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.கர்நாடகாவில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் ஹிஜாப் விவகாரம், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றால் கர்நாடகாவில் ஆளும் அரசு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் அங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நடைபயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் - பாஜகவுடன் நேரடியாக மோதும் நிலையில், ராகுலின் வருகை அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, ராகுல் காந்தியின் நடைபயணத்திலிருந்து விலகி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் பாரத் ஜோடா யாத்ரா தொடக்கவிழாவில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துக் கொண்ட நிலையில், அவர் கலந்துக் கொள்ளவில்லை
மொத்தம் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு பயணித்து காஷ்மீரில் நடைபயணத்தை நிறைவு செய்கிறார்
மேலும் படிக்க:PMGKAY: இலவச உணவுதானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு: ரூ.45 ஆயிரம் கோடி செலவு