இந்தியாவை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள ராகுல் காந்தி தயாராக இல்லை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இரண்டு முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை கண்டித்து தலைநகர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
அதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஒரு சில கோடீஸ்வரர்களின் உதவியுடன் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்து வருகிறார். ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது என சாடினார்.
பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது என்ற ராகுல்காந்தி, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள் என குற்றம் சாட்டியதுடன், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குகளுக்காக நடத்தப்படும் தேர்தல் அல்ல, அரசியல் சாசனம், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம் என்றார்.
இந்தியா கூட்டணியின் இந்த போராட்டத்துக்கு பதிலடி கொடுத்த பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, “இந்த நாட்டின் பெயருக்கு இடையில் புள்ளிகளை வைத்து, தேசத்தைக் காப்போம் என்று பேசுபவர்களின் போரட்டம் நடைபெற்றது. ஆனால், அவர்கள் உண்மையில் தங்கள் குடும்பத்தை காப்பாற்றவே அவர்கள் இருக்கிறார்கள். நாட்டைப் பிரிக்க விரும்பும் கும்பல் அவர்கள்.” என குற்றம் சாட்டினார்.
பிரிவினைவாதம் காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.வில் உள்ளதாக குற்றம் சாட்டிய ஷெசாத் பூனாவாலா, “யுவராஜா (ராகுல் காந்தி) இந்தியாவை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள கூட தயாராக இல்லை. அவர் அந்நிய மண்ணின் தலையீட்டையும் கோருகிறார்.” எனவும் காட்டமாக பேசினார்.
தமிழகத்தில் தற்போது பூதாகரமாகி வரும் கட்சத்தீவு விவகரம் குறித்து பேசிய பூனாவாலா, “தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இன்று தேசத்தையே உலுக்கும் சில தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கச்சத்தீவை உடனடியாக இலங்கைக்கு தாரை வார்க்க இந்திரா காந்தி காலத்தில் கருணாநிதிக்கு உத்தரவிடப்பட்டது. எந்த விவாதமும், சம்மதமும் இல்லாமல், இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கச்சத்தீவு வெறும் நிலம் அல்ல; அது பாரத மாதாவின் குறிப்பிடத்தக்க பகுதி.” என்றார்.