அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி மற்றும் ஹேமந்த் சோரன் மனைவி ஆகியோர் டெல்லியில் சந்தித்து ஆறுதல் கூறிக்கொண்டனர்
பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே மத்திய விசாரணை அமைப்புகள் குறிப்பாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, ஆகியவை மூலம் தங்களுக்கு வேண்டப்படாதவர்களை விசாரணை வளையத்துக்குள் சிக்க வைப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த இரண்டு முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அம்மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 31ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
undefined
அவரை பிப்ரவரி 2ஆம் தேதி வரை அமலாக்கத்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்தது. அதன்பிறகு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநில முதல்வர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தததால் சம்பய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது. இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அந்த சம்மன்கள் முறைகேடானது என கூறிய அவர், சம்மன்களை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தவுள்ளார்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் டெல்லியில் சந்தித்தார், இந்த சந்திப்பின் போது,ம் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ஆறுதல் கூறிக் கொண்டனர். மேலும் அமலாக்கத்துறை நடவடிக்கைகளில் இருந்து தங்களது கணவர்களை விடுவிப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள், மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் அவர்கள் இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.