
கொலம்பியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அங்குச் சிறந்து விளங்கும் இந்திய வாகன நிறுவனங்களான பஜாஜ் (Bajaj), ஹீரோ (Hero), மற்றும் டிவிஎஸ் (TVS) ஆகியவற்றின் செயல்பாட்டைப் பாராட்டியுள்ளார்.
இந்திய நிறுவனங்களின் வெற்றிக்கு, முதலாளித்துவம் (Cronyism) காரணமல்ல, புதுமையே (Innovation) காரணம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "கொலம்பியாவில் பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுவதைக் கண்டு பெருமைப்படுகிறேன். முதலாளித்துவம் மூலம் அல்ல, புதுமையின் மூலமே இந்திய நிறுவனங்களால் வெற்றி பெற முடியும் என்பதைக் இது காட்டுகிறது. சிறப்பான பணி" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கொலம்பியாவில் உள்ள ஈ.ஐ.ஏ. பல்கலைக்கழகத்தில் (EIA University) நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசும்போது, இந்தியாவில் உள்ள சில கட்டமைப்பு குறைபாடுகளை (structural flaws) சுட்டிக்காட்டியிருந்தார்.
அவர் பேசுகையில், "பொறியியல் மற்றும் சுகாதாரத் துறை போன்ற பல துறைகளில் இந்தியாவுக்கு வலிமையான திறன்கள் உள்ளன. எனவே, நான் நாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆனால், அதே சமயம், இந்தியா சரிசெய்ய வேண்டிய கட்டமைப்பு குறைபாடுகளும் உள்ளன. இந்தியாவில் நடைபெற்றுவரும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலே மிகப்பெரிய சவாலாகும்" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் மீது பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது கருத்துக்கள் "இந்தியாவுக்கு எதிரானது" என்றும் "நாட்டை அவமதிப்பது" என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாடுகளில் இந்தியாவின் பிம்பத்தைக் கெடுப்பது ராகுல் காந்தியின் இயல்பு என்று பா.ஜ.க. தலைவர் ஒருவர் விமர்சித்துள்ளார்.