
டெக்ஸ்ட்ரோமேதோர்ஃபன் ஹைட்ரோப்ரோமைடு என்ற பெயரில் சந்தையில் விற்கப்படும் காஃப் சிரப் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் இந்த மருந்தை குடித்த சில சிறுவர் கடுமையான உடல் பிரச்சினைகளுக்கு ஆளாகியதால், உடனடியாக அதிகாரிகள் விசாரணைக்கு இறங்கியுள்ளனர். தும்மல் மற்றும் இருமலை கட்டுப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் இந்த மருந்து, குறிப்பாக உலர் இருமலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மூளையின் தும்மல் தூண்டுதலை அடக்கும் விதத்தில் செயல்படுவதால், சிலருக்கு விரைவான நிவாரணம் அளிக்கும். எனினும், 2 வயதிற்கும் குறைந்த குழந்தைகளுக்கு இதை வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் எச்சரிக்கையாக கூறுவதாவது, 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு அளவை மிகுந்த கவனத்துடன் தான் தர வேண்டும் எனவும் தவறான அளவு உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்றும் கூறியுள்ளனர். கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள், அல்லது அலெர்ஜி பிரச்சினை கொண்டவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என கூறப்படுகிறது. தூக்கம், தலைசுற்றல், வயிற்று நொறுக்கு போன்ற பக்கவிளைவுகள் எளிதில் வரக்கூடியவை. அதைவிட மோசமாக மூச்சுத்திணறல், அரிப்பு, உடலில் சுரம் போன்ற கடுமையான எதிர்வினைகளும் சிலரிடம் பதிவாகியுள்ளன.
சமீபத்தில், ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அந்த சிரப்பின் மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பியுள்ளது. மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் சிறுநீரக பாதிப்பால் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவமும் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இதனால், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு OTC (மருந்தகத்தில் எளிதில் கிடைக்கும்) காஃப் சிரப்புகளை மருத்துவர் பரிந்துரையின்றி கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது.
டெக்ஸ்ட்ரோமேதோர்ஃபன் ஹைட்ரோப்ரோமைடு காஃப் சிரப் சரியான அளவில், சரியான நபர்களுக்கு வழங்கப்படும் போது நன்மை செய்யக்கூடியது. ஆனால் தவறான முறையில் பயன்படுத்தினால் அது உயிருக்கு ஆபத்தானதாக மாறும் என்பதால், மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இதைப் பயன்படுத்தாதீர்கள் என்ற எச்சரிக்கை தற்போது பல இடங்களில் வலுப்படுத்தப்பட்டுள்ளது.