
20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயலற்று இருந்த இந்தியாவின் ஒரே சேற்று எரிமலை (Mud Volcano) அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பாரடாங் பகுதியில் மீண்டும் வெடித்துள்ளது. கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இந்த எரிமலை பெரும் சத்தத்துடன் வெடித்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தில், போர்ட் பிளேரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள பாரடாங்கின் ஜார்வா க்ரீக் (Jarwa Creek) பகுதியில் வியாழக்கிழமை (அக்டோபர் 2) பிற்பகல் 1.30 மணியளவில் சேற்று எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"இவ்வளவு பெரிய வெடிப்பு கடைசியாக 2005ஆம் ஆண்டுதான் பதிவானது. இந்த வெடிப்பு ஒரு வெடிச்சத்தம் போல் மிகவும் சத்தமாக இருந்தது. தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்" என்று அவர் கூறினார்.
இந்த வெடிப்பின் விளைவாக, சுமார் 3 முதல் 4 மீட்டர் உயரம் கொண்ட மண் மேடு உருவாகியுள்ளது. மேலும், சேற்று மண் 1,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ளது. தற்போதும்கூட, தொடர்ந்து சேறும் புகையும் வெளியேறிக்கொண்டு இருப்பதால், வெடிப்பு இன்னும் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கையாக, சேற்று எரிமலைப் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அணுகு சாலைகளை மூடியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து புவியியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஃபைபர் படகு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு இப்பகுதிக்குச் செல்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூமியின் ஆழத்தில் உள்ள சிதைவுற்ற கரிமப் பொருட்களிலிருந்து (decaying organic matter) வெளியேறும் வாயுக்களால் இந்தச் சேற்று எரிமலை உருவாகிறது. இது சேற்றையும் வாயுவையும் மேற்பரப்பிற்குத் தள்ளுகிறது, இதனால் குமிழ்கள் மற்றும் பள்ளங்கள் (craters) உருவாகின்றன. இந்த சேற்று எரிமலை பகுதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சுற்றுலாக் பயணிகளைக் கவரும் இடங்களில் ஒன்றாகவும் உள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 13 மற்றும் 20ஆம் தேதிகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பாரன் தீவில் (Barren Island) இரண்டு முறை சிறிய அளவிலான எரிமலைச் சீற்றங்கள் காணப்பட்டன.