ரேபரேலி உள்ளூர் சலூன் கடையில் தாடியை ட்ரிம் செய்த ராகுல் காந்தி!

By Manikanda Prabu  |  First Published May 14, 2024, 4:35 PM IST

காங்கிரஸ் மூத்த தலைவரும், ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளருமான ராகுல் காந்தி அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் தனது தாடியை  ட்ரிம் செய்து கொண்டார்


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற முயற்சித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

அதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அதேசமயம், ராகுல் காந்தியும் கேரளாவின் வயநாடு, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாடம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளருமான ராகுல் காந்தி அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் தனது தாடியை  ட்ரிம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, “தேர்தல் ஏற்பாடுகள் முடிந்துவிட்டன, ஆனால் முடி வெட்டுவதும் அவசியம்.” என பதிவிட்டுள்ளது. தனது தாடியை  ட்ரிம் செய்து கொண்ட ராகுல் காந்தி, அந்த கடைக்காரர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். முடிதிருத்தும் கடையில் ராகுல் காந்தியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது மனிதநேயம், எளிமை குறித்து நெட்டிசன்கள் புகழாரம் சூடி வருகின்றனர்.

ரேபரேலில் வேட்புமனுத் தாக்கல் செய்த ராகுல் காந்தி தனது முதல் பிரசாரத்தை குறிக்கும் வகையில், அங்கு நேற்று (மே 13ஆம் தேதி) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரசாரத்துக்கு இடையே சுவாரஸ்யமாக, அவரது  திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துக் கொண்டே கூடிய விரைவில் என ராகுல் காந்தி பதிலளித்து சென்றது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம்  கான்கின்றன. அம்மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் போட்டியிடுகிறது.

ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சி படுதோல்வி: பிரஷாந்த் கிஷோர் கணிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான ரேபரேலி தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான சோனியா காந்தி, ராஜ்யசபாவுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால், நீண்ட இழுபறிக்கு பின்னர் அந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

ரேபரேலி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக எம்.பியாக பதவி வகித்துள்ளார் சோனியா காந்தி. அதற்கு முன்பு 12 முறை காங்கிரஸ் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்று 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். நாடு சுதந்திரமடைந்த பின்னர் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மக்களவைத் தேர்தல் 2024, உத்தரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மக்களவைத் தேர்தல் 2024, ரேபரேலி மக்களவைத் தொகுதி, ரேபரேலி சலூன் கடையில் ராகுல் காந்தி தாடி ட்ரிம், Rahul Gandhi, Priyanka Gandhi, Lok Sabha Elections 2024, Uttar Pradesh, Uttar Pradesh Lok Sabha Election 2024, Rae bareilly Lok Sabha Constituency, Rahul Gandhi and Priyanka Gandhi, Rahul Gandhi bears trim in Rae bareilly saloon

click me!