ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தோல்வியடையும் என தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் கணித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. அந்த வகையில், மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்துக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி (நேற்று) வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆந்திர மாநில மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது.
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்.பி. செல்வராஜ் உடல் நல்லடக்கம்!
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தோல்வியடையும் என தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் கணித்துள்ளார். கடந்த மே மாதம் 12ஆம் தேதி அதாவது ஆந்திர மாநில வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் தெலுங்கு டிஜிட்டல் செய்தி இணையதளமான RTVக்கு பேட்டியளித்த அவர், “கடந்த சில மாதங்களாக ஜெகன் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறி வருகிறேன். ஆந்திர சட்டசபைத் தேர்தலில் இம்முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும்.” என்றார். இது தனது மதிப்பீடு என்ற அவர், தேர்தல்கள் நடப்பதால் கூடுதல் விவரங்களுக்குள் தன்னால் செல்ல முடியாது எனவும் கூறினார்.
அதேசமயம், RTV வெளியிட்ட கருத்துக்கணிப்பில், சட்டசபைத் தேர்தலில் இம்முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 51 - 67 இடங்களில் வெற்றி பெறலாம். தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி 106+ இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 15 இடங்களும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும் கிடைக்க வாய்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் குறித்த கருத்துக் கணிப்புகளை ஒரு நாள் முன்பு ஒளிபரப்பி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், RTV பத்திரிக்கையாளர் ரவி பிரகாஷ் ஆகியோர் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.