பாஜகவின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் நிலையை கண்டு கொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும், முத்ரா யோஜனா கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும், மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும் என்பன உள்லிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ள நிலையில், அதனை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, கேரள மாநிலத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஒரே நாளில் பிரசாரம் மேற்கொண்டனர்.
திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ்கோபி, ஆலத்தூர் தொகுதி வேட்பாளரான சரசு, திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளரான மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அட்டிக்கல் தொகுதி வேட்பாளரான மத்திய அமைச்சர் முரளீதரன் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். திருச்சூர் அருகே குன்னங்குளம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கை இந்திய நாட்டின் வளர்ச்சிக்கானது என புகழாரம் சூடினார்.
இந்த தேர்தல் புதிய தலைமுறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் எனவும், பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நாம் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான் எனவும் கூறி அவர் வாக்கு சேகரித்தார்.
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.4650 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்!
அதேசமயம், பாஜகவின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். கேரள மாநிலத்தை ஒட்டிய நீலகிரி மாவட்டம் தாளூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் நிலையை கண்டு கொள்ளவில்லை. இதுதான் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்றார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுகிறார்கள் எனவும், தமிழர்களின் தமிழ் மொழி, கலாச்சாரம், அடையாளங்களை அழிப்பதற்கு பாஜகவினர் முயற்சி செய்கின்றனர் எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். முன்னதாக, வயநாடு தொகுதி வேட்பாளரான ராகுல் காந்தி, அந்த தொகுதியில் வாகன பேரணி மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு தனக்கு வாக்கு சேகரித்தார்.