இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் ரூ.4650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக நாடு முழுவதும் ரூ.4650 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), டெல்லியில் உள்ள வருவாய்த் துறை ஆகியவை சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதைத் தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படைகள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வாகன சோதனை உள்ளிட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு ரொக்கம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
நான் சிபிஐ கஸ்டடியில் இல்லை; பாஜக கஸ்டடியில் இருக்கிறேன் - கவிதா குற்றச்சாட்டு!
இந்த நிலையில், இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக நாடு முழுவதும் ரூ.4650 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களில் 45 சதவீதம் போதைப்பொருட்கள் எனவும் அதிர்ச்சிகரமான தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட மொத்த பணம், பொருட்கள் மதிப்பு ரூ.3475 கோடியாக உள்ள நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே தற்போது ரூ.4650 கோடியை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது. மார்ச் 1ஆம் தேதி முதல் தினமும் ரூ.100 கோடி பறிமுதல் செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக ரூ.778 கோடி அளவுக்கு பறிமுதல் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ரூ.605 கோடி மதிப்பிலும், தமிழ்நாட்டில் ரூ.460 கோடி அளவுக்கு பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விரிவான திட்டமிடல், குழுக்களிடையேயான ஒத்துழைப்பு மற்றும் விசாரணை அமைப்புகளின் ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.