நான் சிபிஐ கஸ்டடியில் இல்லை; பாஜக கஸ்டடியில் இருக்கிறேன் என தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா குற்றம் சாட்டியுள்ளார்
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மாதம் 15ஆம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட கவிதவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் கவிதா அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை திகார் சிறையில் வைத்து சிபிஐயும் கைது செய்தது.
தொடர்ந்து, கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதன்படி, கவிதாவின் சிபிஐ காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கவிதாவின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலங்கான மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தனக்கு ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமான் கனமழை வெள்ளம்: கேரளாவை சேர்ந்த 12 பேர் பலி!
இந்த நிலையில், நான் சிபிஐ கஸ்டடியில் இல்லை; பாஜக கஸ்டடியில் இருக்கிறேன் என தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்கு பிறகு வெளியே வந்த அவரிடம் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், நான் சிபிஐ கஸ்டடியில் இல்லை; பாஜகவின் கஸ்டடியில். பாஜக தலைவர்கள் வெளியில் பேசுவதையே சிபிஐ அதிகாரிகள் தன்னிடம் மீண்டும் கேட்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.