மேற்குவங்க மாநிலத்திற்குள் நுழைந்தது ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை!

By Manikanda Prabu  |  First Published Jan 25, 2024, 12:54 PM IST

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்குவங்க மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.


மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது.

மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களை கடந்து இன்று காலை மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள பக்ஷிர்ஹாட் வழியாக அம்மாநிலத்திற்குள் நுழைந்தது. ராகுல் காந்தியின் யாத்திரையை அம்மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி வரவேற்றார்.

Tap to resize

Latest Videos

யாத்திரையின் கொடியானது அசாமிடம் இருந்து மேற்குவங்க மாநில காங்கிரஸ் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள காக்ராபரி சௌக் நோக்கி பாரத் ஜோடோ நியாய யாத்திரை செல்கிறது. அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார்.

துஃபாங்கஞ்ச் மற்றும் கூச் பெஹார் நகரத்தை கடந்த பிறகு, கூச் பெஹாரில் உள்ள மா பவானி சௌக்கில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரையாக செல்வார். கோக்ஷதங்காவில் பேருந்து மூலமாக செல்லும் ராகுலின் யாத்திரை இன்று  இரவு அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ஃபலகட்டாவில் தங்கவுள்ளது.

ஜனவரி 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, மேற்குவங்க மாநிலத்தின் ஜல்பைகுரி, அலிபுர்துவார், உத்தர் தினாஜ்பூர் மற்றும் டார்ஜிலிங் மாவட்டங்கள் வழியாக ஜனவரி 29ஆம் தேதி பீகார் மாநிலத்துக்குள் ராகுல் காந்தியின் யாத்திரை நுழையவுள்ளது.

அதன்பிறகு ஜனவரி 31ஆம் தேதியன்று மால்டா வழியாக மீண்டும் மேற்கு வங்கத்திற்கு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, பிப்ரவரி 1ஆம் தேதி அம்மாநிலத்திலிருந்து விடைபெறவுள்ளது. அதற்கு முன்பு, காங்கிரஸ் கோட்டையான மால்டா, முர்ஷிதாபாத் பகுதிகளில் யாத்திரை செல்லவுள்ளது.

தேசிய வாக்காளர்கள் தினம்: 50 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்களுடன் உரையாற்றும் பிரதமர் மோடி!

மேற்குவங்க மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அம்மாநிலத்துக்கு ராகுல் காந்தி முதல்முறையாக அம்மாநிலத்துக்கு இன்று சென்றுள்ளார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் ஐந்து நாட்களில் 523 கி.மீ செல்லவுள்ளது. டார்ஜிலிங், ராய்கஞ்ச், வடக்கு மற்றும் தெற்கு மால்டா, மற்றும் முர்ஷிதாபாத்தில் இரண்டு தொகுதிகள் என ஆறு மாவட்டங்கள் மற்றும் ஆறு மக்களவை தொகுதிகள் இதில் அடங்கும்.

எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்த நிலையில், ராகுலின் யாத்திரை அம்மாநிலத்தில் பயணப்படவுள்ளது. மேலும், ராகுலின் யாத்திரை குறித்து இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தங்களுக்கு மரியாதைக்கு கூட தெரிவிக்கவில்லை என மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்: அரசு ஊழியர்கள் ஹேப்பி!

ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வழியாக 67 நாட்களில் 6,713 கி.மீ தூரத்தை கடந்து மார்ச் 20ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளது.

click me!