
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்றபோது, வழக்கறிஞர் ஒருவர் கூகுள் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியை நாடி தனது செல்போனில் தகவல் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செயலைக் கண்ட நீதிபதி சஞ்சய் வசிஷ்த், உடனடியாக அந்த வழக்கறிஞரின் செல்போனை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
வழக்கறிஞர்கள் ஒரு வழக்கிற்காக வாதாடும்போது செல்போனை பயன்படுத்துவது 'மரியாதையற்ற மற்றும் தொழில் முறையற்ற செயலாகும்' என்று நீதிபதி சஞ்சய் வசிஷ்த் தனது உத்தரவில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார். "இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது," என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
"வழக்கறிஞர்கள் விசாரணைக்கு முன்பாகவே தங்களது வழக்குகளுக்குத் தேவையான தகவல்களை சேகரித்து தயாராக வர வேண்டும். தங்களது வாதத்தின்போது செல்போன்களை நம்பியிருக்கக் கூடாது. ஐபேடுகள் மற்றும் லேப்டாப் போன்றவை தொழில்முறை கருவிகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் செல்போன்கள் வாதத்தின்போது பயன்படுத்த ஏற்ற கருவிகள் அல்ல" என்று நீதிபதி மேலும் விளக்கமளித்தார்.
இந்திய நீதித்துறையில் சட்ட ஆராய்ச்சி மற்றும் வழக்கு மேலாண்மைக்காக உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்டு) 'சுபேஸ்' மற்றும் 'சுவாஸ்' போன்ற செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) திட்டங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து வருகிறது. அதேசமயம், செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு உதவி மட்டுமே என்றும், அது ஒருபோதும் மனிதனின் மனதையும் தீர்ப்பையும் மாற்றி விடக்கூடாது என்றும் மூத்த நீதிபதிகள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.