
அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது என்ற நோய் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கும் பரவிவிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் ஏகாப்பொருத்தம்தான்.
அடிக்கடி ஆளுநர் கிரண்பேடி அரசு விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இதைதொடர்ந்து தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சில தினங்களுக்கு முன்பு கோவை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு பணி மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இதற்கு தமிழக அரசியல் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் அதிகாரத்திற்குள் இல்லாமல் எல்லை தாண்டுகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, ஆளுநர்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவரும், பிரதமரும் அறிவுறுத்தி இருப்பதாக கூறினார்.
ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் எதற்காக கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகின்றன என கேள்வி எழுப்பிய கிரண்பேடி, தமிழக ஆளுநருக்கு அரசுத் திட்டங்களை ஆய்வு செய்வதற்கான அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த நாராயண சாமி, அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது என்ற நோய் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கும் பரவிவிட்டதாக தெரிவித்தார்.
அரசு நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என குறிப்பிட்டார்.
மேலும் தமிழக முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்கும் பிரதமர் தான் சந்திக்க நேரம் கேட்டால் மட்டும் ஒதுக்க மறுப்பதாகக் கூறிய நாராயணசாமி, தன்னை பிரதமர் பூதம் என எண்ணுகிறாரோ என வினவியுள்ளார்.