
குஜராத் மாநிலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட தன் தாயாரை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார் மகன், ஆனால் தன் தாய் மாயில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இது சிசிடிவி கேமரா மூலம் உறுதியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீபென் வினோத்பாய் நத்வானி. 64 வயதான இவர், தனது மகன் சந்தீப் நத்வானியுடன் அங்குள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்தார். பேராசிரியரான சந்தீப்பின் தாயார், கடந்த செப்டம்பர் மாதம் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் தற்கொலை வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால், போலீஸாருக்கு திடீரென ஒரு கடிதம் வந்தது. அதில், இது தற்கொலை அல்ல, கொலை. அவரது மகனே தாயாரை கொலை செய்துவிட்டார் என்று கூறப்பட்டிருந்தது .
இதை அடுத்து போலீஸார் வேறு கோணத்தில் விசாரித்தனர். அப்போது, அங்கே பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு ஆராய்ந்தனர். அதில், சந்தீப் தனது தாயாரை கைத்தாங்கலாக மாடிப் படியில் ஏற்றுகிறார். அது இயலாமல் போகவே, லிஃப்டில் ஏற்றி, மாடிக்குக் கொண்டு செல்கிறார். சிறிது நேரம் கழித்து சந்தீப் மட்டும் வீட்டுக்குள் வருகிறார்.
ஆனால் சற்று நேரத்தில் ஒருவர் மாடிப் படியில் ஏறி வந்து சந்தீப் பிளாட்டின் கதவைத் தட்டி, சந்தீப்பின் தாயார் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று கூறுகிறார். இதை அடுத்து சந்தீப் கீழே ஓடிச் செல்கிறார்.
இந்தக் காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், சந்தீப்பிடம் கேட்டபோது, தான் தனது தாயார் மொட்டை மாடியில் காற்றாட அமர்வதற்காக கைத்தாங்கலாக அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார்.
ஆனால், போலீஸார் சிசிடிவி பதிவுகளை நன்கு ஆராய்ந்ததில், அவரது தாயார் மகனின் மேற்பார்வையில் இருந்த போது, கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினர். ஒரு படியை எடுத்து வைத்துக் கடக்கவே சிரமப் பட்டவர், 2.5 அடி உயர சுவரில் மேல் ஏறி நின்று கீழே குதித்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறி, விசாரிக்கும் விதத்தில் விசாரித்தனர். அதில், தனது தாயை நன்கு கவனித்து வந்துள்ளார் அவர். இருப்பினும் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டவே, அவரை கொலை செய்து விடத் தீர்மானித்து, மாடிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து தள்ளி கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்ததாக போலீசார் கூறினர்.