சோனியா மகள் பிரியங்காவின் அரசியல் வருகை... உற்சாக கொண்டாட்டத்தில் பாஜக..!

By vinoth kumarFirst Published Jan 24, 2019, 4:34 PM IST
Highlights

உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினரைவிட பாஜகவினர் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினரைவிட பாஜகவினர் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும் அகிலேஷும் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காமல் கழற்றிவிட்டதால், அக்கட்சி கடும் ஏமாற்றத்துக்குள்ளானது. இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் உத்தரப்பிரேதச காங்கிரஸ் கட்சிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக மாயாவதியும் அகிலேஷும் பலமாக இருக்கக்கூடிய உ.பி. கிழக்கு பகுதிக்கு பிரியங்கா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு வெளியானவுடனே உ.பி.யில் காங்கிரஸார் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். 

‘மீண்டும் இந்திரா வந்துவிட்டார்’ என்ற போஸ்டர்களை ஒரே நாளில் அடித்து ஒட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகிறார்கள். #priyankaGandhi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்டானது. இந்தியளவில் #PriyankaInPolitics, #PriyankaEntersPolitics, PriyankaVadra என்று பல ஹேஸ்டேகுகள் தொடர்ந்து ட்ரெண்டாயின. பல சந்தர்ப்பங்களில் ராகுலுக்கு பதில் பிரியங்கா அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்கும் என்ற கருத்தும் வெளிப்பட்டிருக்கிறது. 

இந்தசூழ்நிலையில் பிரியங்காவின் வருகை காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த காலத் தேர்தல்களில் பிரியங்கா காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார். குறிப்பாக 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார் பிரியங்கா. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து தனித்து 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போதும் அதை மனதில் கொண்டுதான் உ.பி.யில் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 

உத்தரப்பிரதேச தேர்தலில் முழுக் கவனத்தையும் செலுத்த பிரியங்கா முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2009ம் ஆண்டில் வெற்றி பெற்றதைப்போல இந்த முறையும் வெற்றி பெற பிரியங்காவின் வருகை உதவும் என்று காங்கிரஸார் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸின் இந்த முடிவு பாஜகவுக்கே சாதகமாகும் என்ற பார்வையும் உள்ளது. மாயாவதி - அகிலேஷ் கூட்டணியால் பாஜக பின்னடைவை சந்திக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன. 

இந்த இரு கட்சிகளும் சேர்ந்து 50 தொகுதிகள்வரை கைப்பற்றக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், தற்போது பிரியங்காவின் வரவால், ஓட்டுப் பிரிப்பு கூடும் என்று பாஜக கணக்குப் போடுகிறது. 2009-ல் பிரியங்காவின் பிரச்சாரம் உ.பி.யில் காங்கிரஸுக்கு பலம் சேர்த்தது. அதேபோல மீண்டும் நிகழ்ந்தால், ஓட்டுப் பிரிப்பு தங்களுக்கு சாதகமாகும் என்கின்றனர் பாஜகவினர். 

அதற்கு உதாரணமாக, சஹரன்பூர் தொகுதியை உதாரணமாகக் காட்டுகிறார்கள். 2014-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி இங்கே 4 லட்சம் ஓட்டுகளைப் பெற்றது. பாஜக 4.77 லட்சம் ஓட்டுகளைப் பெற்றது. மாயாவதியும் அகிலேஷும் வாங்கிய ஓட்டுகளைக் கூட்டினால் 3 லட்சம் மட்டுமே வருகிறது. வடக்கு உ.பி.யில் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சுமார் 30 தொகுதிகளில் ஒரு லட்சம் முதல் 1.75 லட்சம் வரையிலான வாக்கு வங்கியை வைத்துள்ளது.

 

அந்தத் தொகுதியில் பிரியங்கா வரவால், காங்கிரஸ் கூடுதல் வாக்குகளைப் பெற்றால், அது தங்களுக்கு சாதகமாகும் என்கிறார்கள் பாஜகவினர். பிரியங்கா வருகையை வெளியே பாஜக விமர்சித்தாலும், உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பிரியங்காவின் வருகை தங்களுக்கு சாதகமாக முடியும் என்பதால், உ.பி. பாஜகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

click me!