
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட்டை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது.
பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என உத்தரவிடக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கவும், ஆலைக்கு மின் இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி ஆட்சியர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.