மோடிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... சிவசேனா எடுத்த அதிரடி முடிவு?

By Asianet TamilFirst Published Jan 24, 2019, 3:22 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக - சிவசேனா கட்சிகள், இந்த முறை தனித்து போட்டியிட ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலில் நிரந்த நண்பனும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை என்று கூற்றுக்கு மீண்டும் ஒரு நல்ல உதாரணம் கிடைத்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக - சிவசேனா கட்சிகள், இந்த முறை தனித்து போட்டியிட ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா நீண்ட ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வந்தன. ஆனால், 2014-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்த பிறகு இரு கட்சிகளின் கூட்டணியிலும் சிக்கல் ஏற்பட்டது. என்றாலும், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவுக்கு சிவசேனா ஆதரவளித்து வருகிறது. சிவசேனாவை உதறித்தள்ளி தேர்தலில் போட்டியிட்டது முதலே பாஜக மீது அக்கட்சிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இரு கட்சிகளின் கூட்டணியிலும் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது.  

பிரதமர் நரேந்திர மோடியையும் அமித்ஷாவையும் காட்டமாக விமர்சிக்கும் போக்கை சிவசேனா கடைபிடித்து வருகிறது. ராகுலை பாராட்டி பாஜகவினரை வெறுப்பேற்றுவதையும் அக்கட்சி செய்து வருகிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது பலமான கூட்டணியாக உருவெடுக்கும் என்பதால், பிரதமர் மோடி சிவசேனாவுடன் நட்புக்கரம் நீட்ட முடிவெடுத்தார். 

மோடியின் ஆலோசனைபடி அண்மையில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜக முயற்சி செய்தது. ஆனால், அது கடைசி வரை நிறைவேறவில்லை. இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, “மகாராஷ்டிராவில் பாஜக அனைத்து தொகுதியிலும் போட்டியிடும். முன்னாள் கூட்டணி(சிவசேனா) கட்சியைத் தோற்கடிக்கச் செய்வோம்” என்று திடீரென்று அறிவித்தார். 

கூட்டணிக்கு முயற்சி செய்தும், சிவசேனா பாராமுகமாக இருந்ததால் வெறுப்பான பாஜக, அக்கட்சிக்கு பாடம் புகட்டவே இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கேள்வி எழுந்தது. இதற்கு சிவசேனா கட்சி நாளிதழான ‘சாம்னா’வில் பதில் கூறப்பட்டது. “சிவசேனாவை தோற்கடிக்க இனியும் ஒருவர் பிறந்து வர வேண்டும்” என்று காட்டமாக கூறப்பட்டிருந்தது. 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மகாராஷ்டிராவில் பாஜகவை தோல்வியடைய செய்வதற்கான முயற்சிகளை சிவசேனா எடுத்துவருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவும் அக்கட்சி முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் கூட்டணியை ஏற்படுத்த சில பாஜக தலைவர்கள் தொடர்ந்து முயற்சிவருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை. கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 40 தொகுதிகளை அள்ளின.

click me!