
கொரோனா பரவல் உலக மக்களை வீடுகளுக்குள் முடக்கியதோடு, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களையும் ஒட்டுமொத்தமாக நிறுத்தியிருந்தது.
பிரதமர் மோடி என்றாலே அவர் அதிகமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர் என்று எதிர்க்கட்சிகள் வசைபாடுவது வழக்கம். ஆனாலும் தனது பயணங்களால் சர்வதேச நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியிருக்கிறார். ஒரே பயணத்தில் பல நாடுகளுக்குச் சென்று செலவை குறைத்திருக்கிறார் என்று மோடியின் ஆதரவாளர்கள் விளக்கம் கொடுப்பதும் வாடிக்கை. ஆனால் கொரோனா என்ற உயிர்க்கொல்லி இத்தகைய சண்டைகளுக்கு இரண்டு ஆண்டுகள் ஓய்வு கொடுத்திருந்தது.
உலகம் கொரோனாவில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வருவதை உறுதிப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். கடந்த 2019 செப்டம்பரில் அமெரிக்காவுக்கு பயணம் செய்த மோடி அங்கு டிரம்புக்காக தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பின்னர் அவரால் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியவில்லை. சுமார் ஒன்றேமுக்கால் வருடங்களுக்குப்பின் கடந்த மார்ச் மாதம் அருகில் உள்ள வங்கதேசத்திற்கு பிரதமர் சென்று வந்தார்.
இந்தநிலையில், ஐ.நா. பொதுக்கூட்டம், குவாட் உச்சிமாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். முதலாவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பின்னர் 24-ஆம் தேதி வாசிங்டனில் நடைபெறும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். அன்றைய தினமே வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் உடன் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி விவாதிக்கிறார்.
பின்னர் 25-ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் நூறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதனிடையே அமெரிக்க தொழிலதிபர்கள் உடனும் மோடி கலந்துரையாட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் பதற்றம், கொரோனா பெருந்தொற்று தடுப்பு குறித்து ஐ.நா. பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஜோ பைடன் அதிபரான பின்னர் பிரதமர் மோடி அவரை முதல் முறையாக நேரில் சந்திப்பதால் அவரது அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.