
மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் கடன் தரமதிப்பீட்டை உயர்த்தி ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. ஆதார் ஆகியவற்றை புகழந்துள்ளதையடுத்து, ‘100 கோடி திட்டத்தை’ செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
அதாவது ‘100 கோடி மக்களுக்கு ஆதார் எண்’, ‘100 கோடி மக்களின் வங்கிக்கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்தல்’, ‘100 கோடி மக்களின் செல்போன் எண்ணோடு ஆதார் எண்ணை இணைத்தல்’ திட்டமாகும்.
ரூ. 6 லட்சம் கோடி
இது குறித்து மத்தி நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையின் வெற்றி மூலம், உயர் மதிப்பு கொண்ட ரூ.6 லட்சம் கோடியை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வங்கிக்கணக்கு மூலம் பரிமாற்றம், டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரித்துள்ளது.
இதை மேலும், வலுப்படுத்தும் நோக்கில் நாட்டில் உள்ள 100 கோடி மக்களுக்கு ஆதார் எண், அதை செல்போன், வங்கிக்கணக்குடன் இணைத்தல் திட்டத்தை தீவிரப்படுத்த உள்ளது. இதற்கான காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. டிஜிட்டல் திட்டம், நிதிப்பரிமாற்றத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த திட்டம் செய்படுத்தப்ட உள்ளது.
ரூ.12 லட்சம் கோடி
அரசின் புள்ளிவிவரங்கள்படி, ரூபாய் நோட்டு தடைக்கு முன் ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது, 2017ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் இது ரூ. 12 லட்சம் கோடியாக மட்டுமே இருக்கிறது.
இதன் மூலம், ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால், ரூ.18 லட்சம் கோடி பணப்புழக்கத்தில் இருந்து ரூ. 6 லட்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.
கருப்புபணம் குறைந்தது
இந்த குறைப்பினால், இந்த விதமான பிரச்சினையும் ஏற்படவில்லை. அதேசமயம், மக்கள் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறவைத்துள்ளது, கருப்புபணம் பதுக்கிவைப்பதும் கனிசமாகக் குறைந்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.