குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதை அடுத்து நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். திரௌபதி முர்மு நாளை குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்க உள்ள நிலையில் இன்றுடன் ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன். எனது பதவிக் காலத்தில் மருத்துவர்கள்-செவிலியர்கள், விஞ்ஞானிகள்-பொறியாளர்கள், நாட்டின் நீதிவழங்கல் முறைக்குப் பங்களிப்பு அளிக்கும் நீதிபதிகள்-வழக்குரைஞர்கள், நிர்வாகத்தைச் சீராக இயக்கும் ஆட்சிப்பணி அதிகாரிகள், வளர்ச்சியோடு அனைத்து சமூகப் பிரிவுகளையும் இணைக்கும் நமது சமூக சேவகர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் முழு ஒத்துழைப்பும், ஆதரவும், ஆசிகளும் பெற்றேன். நமது முப்படைகள், துணை இராணுவம், காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த தைரியமான வீரர்களை சந்திக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புகள், குறிப்பாக என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அவர்களிடம் இருக்கும் தேசபக்தி உணர்வு ஆச்சரியமானதாக இருப்பதோடு, கருத்தூக்கம் அளிக்கவும் வல்லது. அயல்நாடுகளுக்கு நான் சென்ற போது, அங்கே வாழும் இந்திய வம்சாவளி உறுப்பினர்களோடு நான் பேசிய போதெல்லாம் அவர்களுக்கு தாய்நாட்டின் மீது இருந்த அன்பும் அக்கறையும் உள்ளத்தைத் தொடும் விதமாக இருந்தன.
இதையும் படிங்க: FACT CHECK : ஜனாதிபதிக்கு வணக்கம் சொன்னாரா பிரதமர் மோடி.. ட்விட்டர் சொன்ன உண்மை !
தேசிய விருதுகளை அளிக்கும் வேளையில், சில அபூர்வமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. தங்களுடைய சக இந்தியர்களுக்கு மேம்பட்ட ஒரு வருங்காலத்தை உருவாக்குவதில் அவர்கள் விடாமுயற்சியோடும், அர்ப்பணிப்போடும் இருக்கிறார்கள். நாடு என்பது அதன் குடிமக்களால் ஆனது என்ற நம்பிக்கையை இவை அனைத்தும் மீளுறுதிப்படுத்துகின்றன; நீங்கள் ஒவ்வொருவரும் இந்தியாவை மேலும் மேலும் மேம்பட்ட நாடாக ஆக்கும் முனைப்போடு இருக்கையில், தேசத்தின் மகத்தான எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது. நாட்டை கட்டமைப்பது குடிமக்களே. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். தேசம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. அடுத்த மாதம் நமது நாடு 75 ஆவது சுதந்திர நாள் விழாவை கொண்டாடவுள்ளோம். நாம் அமிர்த காலத்திற்குள் நுழைவோம், 100 ஆண்டுகளை நோக்கி நாம் நகர உள்ளோம். ஆண்டுவிழாக்கள் எல்லாம் நமது குடியரசின் பயணத்தின் மைல்கற்கள். தனது வல்லமையைத் தெரிந்து, உலகிற்குத் தனது சிறந்த பங்களிப்பை ஆற்றக்கூடிய பயணம். பொதுமக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்தின் தூண்கள் இணைக்கப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தால் உருவானது நமது இந்தியா. வேற்றுமையைத் தாண்டி நாம் உயர வேண்டும்.
இதையும் படிங்க: இனி இரவு நேரத்திலும் தேசிய கொடியைப் பறக்கவிடலாம்.. பழைய உத்தரவை மாற்றி மத்திய அரசு அதிரடி.!
தேசியக் கல்விக் கொள்கையானது, இளம் இந்தியர்களைத் தங்களுடைய பாரம்பரியத்தோடு இணைப்பதோடு, 21ஆம் நூற்றாண்டில் அவர்கள் உறுதியாகக் கால்பதிக்க பெரிய வகையில் உதவி புரியும் என்று நான் நம்புகிறேன். அவர்களின் நாளைய வளமான வாழ்விற்கு, ஆரோக்கியப் பராமரிப்பு மிக அவசியம். பொதுமக்களுக்குப் பயனாகும் உடல்நலக் கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை, பெருந்தொற்று அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. இந்தப் பணிக்கு அரசாங்கம் உச்சபட்ச முதன்மை அளித்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கல்வியும், ஆரோக்கியமும் கவனித்துக் கொள்ளப்பட்டால், தங்களுடைய வாழ்க்கைக்கான சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்க, பொருளாதார சீர்த்திருத்தங்கள் குடிமக்களுக்கு உதவிகரமாக இருக்கும். நாம் நமது சுற்றுச்சூழலை, நமது நிலத்தை, காற்றை, நீரை, நமது குழந்தைகளுக்காகவாவது பாதுகாக்க வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில், வாடிக்கையான தேர்வுகளில், நமது மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள், பிற உயிரினங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் அக்கறை காட்ட வேண்டும். தேசத்தின் முதல் குடிமகன் என்ற முறையில், என் சக குடிமக்களுக்கு ஆலோசனை ஒன்று நான் வழங்க வேண்டுமென்றால் அது இதுவாகவே இருக்கும். 21 ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கு நம் நாடு தயாராகி வருகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாரத அன்னைக்கு என் வணக்கங்கள். உங்கள் அனைவரின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.