நுபுர் ஷர்மா சர்ச்சை... ஜாவெத்-க்கு பதில் பர்வீன் பாத்திமா வீடு இடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

By Kevin KaarkiFirst Published Jun 14, 2022, 11:32 AM IST
Highlights

சட்டவிரோதமாக கட்டிடம் கட்டப்பட்டு இருப்பது பற்றி உள்ளூர் மக்களிடம் விசாரணை நடத்தி, நிலத்தில் கட்டிடம் கட்டியவருக்குத் தான் நோட்டீஸ் கொடுப்போம்.

முஸ்லீம் இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை தெரிவித்த நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி ஜூன் 10 ஆம் தேதி பிரயாக்ராஜில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பின் வன்முறையாக மாறியது. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஜாவேத் அகமது செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஜாவேத் அகமது ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரயாக்ராஜ் நகர்ப் புற வளர்ச்சிக் குழும அதிகாரிகள், ஜாவேத் அகமதின் வீடு முறையான ஒப்புதல் இன்றி கட்டப்பட்டு இருப்பதாக கூறி புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளினர். போராட்டத்தில் கலந்து கொண்டவரின் வீடு இடிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதோடு, போராட்டங்களும் நடைபெற்றன. 

வீட்டு உரிமையாளர்:

இந்த விவகாரத்தில் வீடு இடிப்பதற்கு ஒரு நாள் முன்னரே பிரயாக்ராஜ் நகர்ப் புற வளர்ச்சி குழும அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் வழங்கிய நோட்டீசில் வீட்டின் முகவரி மற்றும் முகமது ஜாவெத் பெயர் தான் இடம்பெற்று இருந்தது என கூறப்படுகிறது. உண்மையில், பிரயாக்ராஜ் அதிகாரிகள் இடித்த வீடு பர்வீன் பாத்திமா என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் கைது செய்யப்பட்டுள்ள முகமது ஜாவெத்-இன் மனைவி ஆவார். 

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முகமது ஜாவேத் மகள் சௌமியா பாத்திமா, “பிரயாக்ராஜ் நகர்ப் புற வளர்ச்சி குழும அதிகாரி என் தந்தைக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டு, என் தாயாரின் வீட்டை இடித்தார். அவர்கள் இடித்த வீடு என் தாயார் பெயரில் உள்ளது. இந்த வீட்டை என் தாயார் பர்வீன் பாத்திமாவின் தந்தை கலீமுதீன் சித்திக் வைத்து இருந்தார். இவர் இந்த வீட்டை என் தாயாருக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன் பரிசாக வழங்கினார். அப்போது தரை தளம் மட்டும் கட்டப்பட்டு இருந்தது. அதன்பின் மேலும் இரண்டு மாடிகள் கட்டப்பட்டன,” என்று தெரிவித்தார்.

தகவல் தெரிவிக்கப்படவில்லை:

“வீடு கட்டப்பட்டதில் இருந்து எந்த அரசு துறை நிறுவனமும், அது சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருக்கிறது என தெரிவிக்கவே இல்லை. வீட்டிற்கான வரி, தண்ணீர் வரி மற்றும் மின் இணைப்புகள் அனைத்தும் என் தாயார் பெயரிலேயே உள்ளது. மேலும் அனைத்து விதமான வரிகளும் சரியான நேரத்தில் கட்டப்பட்டு உள்ளன. ஞாயிற்றுக் கிழமைக்கு முன் எந்த அதிகாரியும், வீடு சட்ட விரோதமாக கட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கவே இல்லை,” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதோடு, தற்போது இடிக்கப்பட்ட வீட்டின் கேட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், “ 25x60 அடி அளவில் கட்டப்பட்டு இருக்கும் கட்டிடத்திற்கு சரியான அனுமதி பெறப்படவில்லை.” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

அதிகாரிகள் விளக்கம்:

இந்த விவகாரம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத பிரயாக்ராஜ் நகர்ப் புற வளர்ச்சிக் குழும அதிகாரி, “உள்ளூர் மக்களிடம் விசாரணை நடத்தி, நிலத்தில் கட்டிடம் கட்டியவருக்கு நாங்கள் நோட்டீஸ் கொடுப்போம். நிலத்தின் உரிமையாளர் யார் என்பது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தேவையில்லை. உள்ளூர் பகுதிவாசிகள் அந்த வீட்டின் உரிமையாளர் முகமது ஜாவெத் என கூறினர். அதன் அடிப்படையில் தான் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது,” என தெரிவித்தார்.

click me!