
நாடு முழுவதும் அமலுக்கு வந்ததது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை… பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடி இணைந்து தொடங்கி வைத்தனர்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து தொடங்கி வைத்தனர். இதனையடுத்து இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலை வகித்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஜிஎஸ்டி அறிமுக கூட்டம் தொடங்கியது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜி.எஸ்.டி குறித்து உரையாற்றினார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி ஜிஎஸ்டி குறித்து உரையாற்றினார்.
அப்போது நிதியமைச்சராக தான் இருந்தபோது ஜிஎஸ்டி உருவாக்கத்தில் பெரிய அளவில் பங்காற்றியதாக தெரிவித்தார். 14 ஆண்டு பயணம் பயனை எட்டும் நேரம் வந்தள்ளது என கூறிய பிரணாப், கடந்த ஆண்டு ஜிஎஸ்டிக்கு . ஒப்புதல் அளித்ததாகவும் இதற்காக பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து மணியடித்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்தனர்