அஞ்சல் தலை சேகரிக்க விருப்பமா...? இனி வீட்டுக்கே வரும் அஞ்சல் தலைகள்...

First Published Oct 20, 2016, 2:42 AM IST
Highlights


அஞ்சல் தலை சேகரிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அஞ்சல் துறை ஏற்படுத்தி உள்ளது. அஞ்சல் தலை சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கும் ஒருவருக்கு, அஞ்சல் துறையால் வெளியிடப்படும் அஞ்சல் தலைகள் மற்றும் அதன் விபரங்களுடன், கணக்கு தொடங்கியவரின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் இந்த திட்டத்தை தேனி கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த வாரம் அஞ்சலக வாரம் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அஞ்சல் தலை சேகரிக்கும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. போடி அருகே, மக்களைத் தேடி அஞ்சல் துறை - அஞ்சலக நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. 

தேனி கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தலைமையில் இந்த பிரசாரம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு, மாதாந்திர தொடர் சேமிப்பு கணக்கு, குறிப்பிட்ட கால வைப்பு நிதி கணக்கு, அஞ்சல் ஆயுள் காப்பீடு, பாரத பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றோம் என்றார்.

இது தவிர ரூ.200 செலுத்தி அஞ்சல் தலை சேமிப்புத் திட்ட கணக்கைத் தொடங்கினால், அவ்வப்போது வெளியிடப்படும் அஞ்சல் தலைகள் மற்றும் அதன் விவரங்களுடன் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அவர் கூறினார். 

இந்த திட்டத்தின் மூலம் அஞ்சல் தலை சேகரிக்கும் ஆர்வத்தை உருவாக்கி வருவதாகவும், விலை மதிப்பில்லா அஞ்சல் தலைகளை சேகரிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் சுவாமிநாதன் தெரிவித்தார். 

click me!