
மோடியின் திட்டத்தால், ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் கலாய்க்கும்டி பதிவு செய்துள்ளார்.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த பணத்தை மாற்றுவதற்கு வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகாலை முதல் மாலை வரை அலைமோதுகிறது. பிரதமரின் அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் ஆனபோதும் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை எடுக்கவும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதையொட்டி நேற்று முன்தினம் பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபூர் நகரில் கருப்பு பணத்தின் மீதான நடவடிக்கை பற்றி பேசுகையில், ‘‘ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள். கருப்பு பணம் வைத்திருப்போர் தூக்கம் இன்றி தவிக்கிறார்கள். தூக்க மாத்திரைகளை தேடி ஓடுகின்றனர்’’ என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில், சில பதிவுகளில் மத்திய அரசையும், மோடியையும் கலாய்த்துள்ளார்.
ஒரு பதிவில், ‘‘மோடி அரசு அமல்படுத்திய திட்டத்தால் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் வங்கிகளில் வரிசையில் காத்து நிற்கின்றனர். உற்பத்தி திறன் நீண்ட காலம் வாழ்க’’ என்றும், மற்றொரு பதிவில், ‘‘ஆயிரக்கணக்கான பணக்காரர்களும், ஊழல்வாதிகளும் வங்கிகளில் வரிசையில் காத்து நிற்கின்றனர். ஏழைகள் தங்களது வீடுகளில் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்’’ என்றும் கூறியுள்ளார்.
இன்னொரு டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது நல்லநாள் (அச்சே தின்) வரும் என்று வாக்குறுதி அளித்ததை குறிப்பிட்டு, ‘‘வங்கிகளால் மக்களுக்கு பணமே கொடுக்க இயலவில்லை. நல்ல நாள் வந்து விட்டது என்பதற்கு இதுவே சாட்சி’’ என்றும் ஜாலியாக கிண்டலடித்து குறிப்பிட்டுள்ளார்.