குறைந்த விலையில் தக்காளி: ஆந்திராவில் போட்டி போட்டு கொண்டு விற்கும் அரசியல் கட்சிகள்!

By Manikanda PrabuFirst Published Jul 13, 2023, 10:31 AM IST
Highlights

ஆந்திர மாநிலத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகின்றன

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தக்காளி கிலோ ஒன்று ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து, தக்காளி விலையை குறைக்கவும், தட்டுப்பாட்டை போக்கவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், தக்காளியை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ரேஷன் கடைகள் மூலமும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமும் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

வனத்துறை ஆட்சேர்ப்பு: பெண்களின் மார்பை அளவிடும் முறை.. ஹரியானா அரசு விளக்கம்

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகின்றன. அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தக்காளி கிலோ ரூ.50க்கு விற்பணை செய்யப்படுகிறது. இதற்கு போட்டியாக எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் சார்பில் தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய காய்கறிகளை பொதுமக்களுக்கு மலிவாக கிடைக்கச் செய்யும் நடவடிக்கையின் ஒருபகுதியாக ஆந்திர அரசியல் கட்சிகள் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அம்மாநில சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்களை கவரும் பொருட்டு குறைந்த விலை தக்காளி விற்பனையை அம்மாநில அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

click me!