தேர்வு எழுத வந்த இளம் தாயின் குழந்தையை 3 மணி நேரம் கவனித்துக் கொண்ட போலீஸ் !! குவியும் பாராட்டுக்கள் !!

By Selvanayagam PFirst Published Oct 2, 2018, 10:51 AM IST
Highlights

தெலங்கானா மாநிலத்தில் தேர்வு எழுதவந்த பெண் ஒருவரின் கைக்குழந்தையை, அங்குபாதுகப்பிற்காக வந்திருந்த காவலர் ஒருவர் 3 மணி நேரமும் பார்த்துக் கொண்டதோடு அந்த குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில்  நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காவலர்கள் எழுத்து தேர்வு நடைபெற்றது. அப்போது மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் கல்லூரியில் நடைபெற்ற தேர்வின்போது அங்கு பாதுகாப்புக்காக வந்த போலீஸ் ஒருவர் கைக்குழந்தை  ஒன்றை கையில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தார்.

அன்று தேர்வு எழுதுவதற்காக நித்யா என்ற இளம் தாய் ஒருவர் வந்திருந்தார். அவர் தனது கைக்குழந்தையையும் எடுத்து வந்திருந்தார். நித்யாவின்  தாய் அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள வருவதாக சொல்லியிருந்தார், ஆனால் அவர் வராததால் செய்வதறியாது திகைத்த நித்யா அழுது கொண்டிருந்தார்.

பாதுகாப்பிற்காக அங்கு வந்திருந்த முஜிபுர் ரஹ்மான் என்ற போலீஸ் நித்யாவிடம் விவரத்தைக் கேட்டு , அவரைத் தேற்றியதோடு மட்டுல்லாமல் தேர்வு முடியும் வரை குழந்தையை பார்த்துக் கொள்வதா கூறி அதை வாங்கிக் கொண்டார்.

இதையடுத்த  அவர் நித்யா தேர்வெழுதி முடிக்கும் வரை குழந்தையை கவனித்துக் கொண்டார். முஜிபுர் ரஹ்மான் அந்தக் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்ததை தெலங்கானா ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஸ்வரி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட தற்போது இது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள மூசாபேட் காவல்நிலையத்தில் தலைமை கான்ஸ்டபிளாகப் பணிபுரியும்  முஜிபுர் ரஹ்மான் தான் செய்த இந்தவேலை ஒன்றும் பெரிதில்லை என்றும், மக்களுக்காக உழைக்கவே நாங்கள் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் அந்தக் குழந்தையை நான் பார்த்துக் கொண்ட அந்த சில மணி நேரம் தான் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மானின் இந்த செயலுக்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

click me!