
டிரான்ஸ்பர் தடையை கொண்டாடப்போய், போலீசார் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் திப்னா கெதா என்ற கிராமத்தில் போலீஸ் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக யோகேந்திர பார்மர் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் யோகேந்திர பார்மரை, 2 நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் திப்னா கெதா கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் யோகேந்திர பார்மர் மீது, துறை ரீதியான விசாரணை முடிவடையாததால் பணியிட மாற்றம் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் திப்னா கெதா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
யோகேந்திர பார்மரின் பணியிட மாற்றம் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, அதனைக் பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்தனர். போலீஸ் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது. போலீஸ் நிலைய வாசலில் மேடை அமைக்கப்பட்டு கடந்த 17 ஆம் தேதி நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நடன குழுவினருடனும் கிராம மக்களும், போலீசாரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் இந்தி பட பாடல் ஒன்றுக்கேற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர். இது குறித்து விதிஷா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸ் அதிகாரி யோகேந்திர பார்மர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், 4 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.