
Andhra Pradesh Police beat 3 youths in Public: ஆந்திரப் பிரதேச காவல்துறையினர் பொதுமக்கள் முன்பு நடுரோட்டில் 3 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவின் தெனாலி காவல்துறையினர் கஞ்சா போதையில் ஒரு கான்ஸ்டபிளைத் தாக்கியதாகக் கூறி செப்ரோலு ஜான் விக்டர், ஷேக் பாபுலால் மற்றும் டோமா ராகேஷ் ஆகிய மூன்று நபர்களைக் கைது செய்தனர்.
3 குற்றவாளிகளை அடித்த காவலர்கள்
ஒரு மாத கால விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசர் அடிப்பதைக் காட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது குற்றச்செயலில் ஈடுபட்ட 3 இளைஞர்களும் சாலையில் அமர்ந்துள்ளனர். அப்போது ஒரு போலீஸ்காரர் அவர்கள் 3 பேரின் காலிலும் சரமாரியாக லத்தியால் தாக்குவது போலவும், அவர்கள் வலியால் அலறுவது போலவும் வீடியோ காட்சிகள் பதிவாகி உள்ளன. இவர்களை சுற்றி ஏராளமான மக்கள் இருப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
போலீஸ் கான்ஸ்டபிளை தாக்கிய இளைஞர்கள்
குற்றம் சாட்டப்பட்ட செப்ரோலு ஜான் விக்டர் (25), ஷேக் பாபுலால் (21), மற்றும் டோமா ராகேஷ் (25) ஆகியோர் லட்டு என்ற பிரபலமான ரவுடி-ஷீட்டரின் நெருங்கிய கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு மூவரும் 'கொலையாளி' என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் சேர்ந்து, கஞ்சா போதையில் கான்ஸ்டபிள் கண்ணா சிரஞ்சீவியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து நடுரோட்டில் வைத்து அடித்தது தெரியவந்தது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்
கைதான 3 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். விக்டர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட ஒன்பது வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ராகேஷின் மீது இதே போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் உட்பட ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கான்ஸ்டபிள் மீதான தற்போதைய தாக்குதலின் வழக்கில் பாபுலால் சம்பந்தப்பட்டிருந்தார்.
போலீஸ் செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும்
நடுரோட்டில் போலீசார் அடித்த 3 பேரும் குற்றவாளிகள் என்றாலும் அவர்கள் சட்டத்தை கையில் எடுத்தது தவறு என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மற்றொரு சிலர், ''போலீஸ் செய்தது சரி தான். இப்படி பொது வெளியில் அடித்தால் தான் குற்றவாளிகள் திருந்துவார்கள். குற்றம் செய்ய பயப்படுவார்கள்'' என்று கூறியுள்ளனர்.